“வெப் சீரிஸ்களை குறை சொல்ல தேவையில்லை..” என்கிறார் சனம் ஷெட்டி..! 

“வெப் சீரிஸ்களை குறை சொல்ல தேவையில்லை..” என்கிறார் சனம் ஷெட்டி..! 

தமிழில் ‘அம்புலி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, ‘கதம் கதம்’, ‘சவாரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன் கலைவன் என்பவர் இயக்கி வரும், புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சனம் ஷெட்டி.

இந்தப் புதிய படத்தில் ‘பர்மா’ படத்தில் நடித்த மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். ரிவெஞ்ச் திரில்லர் ஜானரில், அதே சமயம் ஒரு அர்த்தமுள்ள காதல் கதையாகவும் இந்தப் படம் உருவாகி வருகிறது.

சாதாரண நடுத்தர வீட்டுப் பெண்ணாக நாயகனின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள ‘டிக்கெட்’ என்கிற ஃபேண்டஸி  படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இது தவிர தற்போது  வெப் சீரிஸ்  பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ள இவர் அதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

“திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போது வெப் சீரியஸிலும் எதற்காக நடிக்கிறீர்கள்..?” என்று கேட்டதற்கு, “தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. அதுமட்டுமல்ல ஒரு நடிகையாக வெப் சீரிஸ் மற்றும் சினிமா இரண்டுக்கு பெரிய வித்தியாசம் எனக்கு தெரியவில்லை. இரண்டுக்கும் ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்க வேண்டி இருக்கிறது. அவை வெளியாகும் தளங்கள்தான் வேறு.

தமிழில் வெப் சீரிஸ்கள் ரொம்பவே குறைவாக வருகின்றன. ஆனால் இதற்கான பார்வையாளர்கள் நிறைய இருக்கிறார்கள்.. அதனால் அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது..” என்கிறார். 

“வெப் சீரிஸ் என்கிற பெயரில் சென்சார் அனுமதி தராத விஷயங்களையெல்லாம் உள்ளே புகுத்துவது நியாயமா..?” என்கிற ஒரு கேள்வியையும் அவரிடம் கேட்டால், “கதையை இயல்பானவிதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக சில நேரத்தில் எதார்த்தமாக சில விஷயங்களை இணைத்திருப்பார்கள்.. அதில் நாம் தவறு கண்டு பிடித்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை…” என்றார் சனம் ஷெட்டி.

 
error: Content is protected !!