“விருதுகளுக்கான படம் என்றால் சம்பளமே வேண்டாம்…” – நடிகை மீரா மிதுனின் தள்ளுபடி அறிவிப்பு..!

“விருதுகளுக்கான படம் என்றால் சம்பளமே வேண்டாம்…” – நடிகை மீரா மிதுனின் தள்ளுபடி அறிவிப்பு..!

ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’.  

குறும் படங்களில் நாயகனாக கலக்கிய தீரஜ் இந்த படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமாகிறார். 

அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்துரு இந்தப் படத்தை இயக்குகிறார். பிரபலமான ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கே.பி. இசையமைக்கிறார். சாபு ஜோசப் படத் தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணிபுரிகிறார்கள்.

படத்தின் தலைப்பே மொத்த படத்தைப் பற்றியும் சொல்லும். சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல மாடலிங் அழகியான மீரா மிதுன்.

இத்திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி மீரா மிதுன் பேசும்போது, “இதில் நான் செய்திருப்பது அர்த்தமுள்ள ரோல் என்றுதான் சொல்லுவேன்.

#MeeraMitun (8)

இயக்குநர் கே.ஆர்.சந்துரு ஒரு குறும் பட இயக்குநர். அவர் என்னிடம் கதை சொன்ன உடனேயே இந்த ரோலை செய்துவிடவேண்டும் என்று எனக்குள் தோன்றியது. படத்தில் வரக் கூடிய ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் உள்ள கதை இது.

‘போதை ஏறி புத்தி மாறி’ன்னு டைட்டிலைக் கேட்டவுடன் ‘குடி குடியைக் கெடுக்கும்’னு அட்வைஸ் பண்ணப் போற படம்னு நினைச்சா அது தவறு. ‘தடம்’ மாதிரி துள்ளத் துடிக்க சீட் நுனிக்கு நம்மைக் கொண்டு வந்து நிறுத்தும் த்ரில்லர் வகைப் படம் இது. தலைப்புக்கான காரணத்தை கிளைமாக்ஸில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். 

கவிதை மாதிரி ஒளியைக் கையாள்பவர் பாலசுப்ரமண்யெம் சார். அப்படித்தான் மொத்தப் படத்தையும் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரையிலும் கதைக்காக மொட்டை போடச் சொன்னால்கூட போடுவேன். நான் நடிப்பில் தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. அவர் இப்போது இல்லை. ஆனால் அதை கண்டிப்பாக நான் நனவாக்குவேன். அப்படியொரு கதை கிடைக்கும்பட்சத்தில் சம்பளமே வாங்காமல்கூட நடிப்பேன்.  

கிளாமர்ன்னு கேட்ட உடனே ஓட மாட்டேன். மாடலிங் உலகில் இல்லாத கிளாமரா…? அங்கிருந்து வந்ததால் அதன் எல்லை எனக்கு நன்றாகவே தெரியும். கதையின் முக்கியத்துவத்தைப் பொருத்து என் கவர்ச்சி உங்களது கண்களைப் பறிக்கலாம்…” என்கிறார் கண் சிமிட்டலுடன்..!