சிம்ரன் போல பெயரெடுக்க வேண்டும் – நடிகை மனிஷா யாதவின் ஆசை..!

சிம்ரன் போல பெயரெடுக்க வேண்டும் – நடிகை மனிஷா யாதவின் ஆசை..!

‘Cameo films’ நிறுவனத்தின் சார்பில் சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்க, G.V.பிரகாஷ் குமார், ‘கயல்’ அனந்தி நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’.

படத்தின் தலைப்பு முதல் நடிப்பவர்கள்வரையிலும் பரபரப்புக்கு குறைவில்லாத இந்தக் கூட்டணியில் நடிகை மனிஷா யாதவ்வும் இணைந்துள்ளார். ஏற்கனவே நடிகை சிம்ரன் அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து வருவது தெரிந்ததே.

இந்தப் படத்தில் நடித்தது பற்றி பேசிய நடிகை மனிஷா யாதவ், “படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். ஜி.வி. பிரகாஷ் ஒரு நல்ல இசை அமைப்பாளர் மட்டுமல்ல, நடிகரும்கூடத்தான் என்பதை மூன்றே நாட்களில் புரிந்து கொண்டேன். 

இயக்குனர் ஆதிக் பொறுமையாக எனக்கு காட்சிகளை விளங்க வைத்து உதவி புரிகிறார். அவரது இயக்கம் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. சிம்ரன் மேடத்தின் தீவிர ரசிகை நான். அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிக்கிறேன் என்பது எனக்கு மிகப் பெரிய சந்தோஷம். வரும் நாட்களில் அவரை சந்திப்பேன் என்று நம்புகிறன்.  அவரைப் போலவே பெயர் வாங்க வேண்டும் என்பதே என் லட்சியம். அந்த லட்சிய பயணம் இந்தப் படம் மூலம் துவங்கும் என்பதில் தீவிர நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்கிறார் இளம் நடிகை மனிஷா யாதவ்.