“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..!

“மகாமுனி’ என் வாழ்க்கை முழுவதும் பாராட்டைக் கொடுக்கும்..” – நடிகை மகிமா நம்பியார் பேட்டி..!

சென்ற வாரம் வெளியாகி ‘சிறந்த படைப்பு’ என்கிற பெயருடன், இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மகாமுனி’ படத்தின் வெற்றியால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.

‘தென்னிந்திய சினிமாவில் இன்னொரு சிறந்த நடிகை’ என்ற அடையாளத்தோடு உலா வரும் அளவிற்கு ‘மகாமுனி’ படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அந்த சந்தோஷத்தோடு தனது சினிமா வாழ்க்கைப் பயணம் பற்றி பல விஷயங்களை பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

இனி மகிமா நம்பியார் பேசுகிறார்.

“எங்கள் வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு என்பது துளியும் கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு, ஏனோ சிறுவயது முதலே நடிப்பின் மீது அளப்பரிய ஆசை மற்றும் ஆர்வம். நாம் உண்மையாக ஒன்றை நேசித்தால் அது நம்மை நோக்கி வருமல்லவா? அதுதான் என்னை நடிகையாக்கி இருக்கிறதென்று நினைக்கிறேன்.

ஒரு முறை கேரளாவிற்கு லொக்கேசன் பார்க்க வந்த இயக்குநர் சாமி சார் கண்ணில் நான் படவும், ‘சிந்து சமவெளி’ படத்தில் ஒரு சிஸ்டர் கேரக்டருக்கு என்னை நடிக்க அழைத்தார். என் பள்ளிப் படிப்பு காரணமாக அப்படத்தில் நடிக்க இயலவில்லை.

mahima nambiar-saattai-movie-stills

ஆனால், அப்போது அவர்கள் மூலமாக என் போட்டோ ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகனின் கண்களில்பட அதன் பிறகு வந்த வாய்ப்புதான் ‘சாட்டை’ படம். ‘சாட்டை’ படத்தில் நடிக்கும்போது எனக்கு சூட்டிங் பற்றி எதுவுமே தெரியாது. இயக்குநர் அன்பழகன் சார்தான் நிறைய விசயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தார்.

குறிப்பாக தமிழ் தெரியாததால் மிகவும் சிரமப்பட்டேன். எல்லோரும் என்னை தமிழ் தெரியவில்லை என்பதற்காக கிண்டல் செய்தார்கள். நான் அப்போது எப்படியாவது இந்தப் படம் முடிவதற்குள் தமிழ் எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை உடன் நடிக்கும் மாணவிகள் துணையோடு சிறப்பாக நிறைவேறியது.

தமிழில் முதல் பட அனுபவமே எனக்கு தமிழை நன்றாக கற்றுக் கொடுத்துவிட்டது.   தமிழை கற்கும்போது இருந்த காதல் தமிழை கற்ற பிறகு இன்னும் அதிகமாகிவிட்டது.

mahamuni-movie-stills-1

என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்துவிட்டது சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மகாமுனி’ திரைப்படம். முதலில் எனக்கு இந்தப் படத்தின் கதையே தெரியாது. ‘மெளன குரு’ பட இயக்குநர் சாந்தகுமார் என்றதும் வேறு கேள்வியே கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்டேன். என்னை ஸ்கீரினில் பார்க்கும்போது எனக்கே வியப்பாக இருந்தது. அது இயக்குநர் சாந்தகுமார் சார் செய்த மேஜிக்.

எனக்கு டப்பிங் பேசும்போது ரொம்பப் பயமாக இருந்தது. நான் சாந்தகுமார் சாரிடம் என் வாய்ஸ் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் மிகவும் கான்பிடன்டாக பேசச் சொன்னார். அவரின் நம்பிக்கை நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

mahamuni-movie-stills-3

இதைப்போல நடிக்கும்போதும் சாந்தகுமார் நம்மை உளவியல் ரீதியாக தயார்படுத்துவார். ஸ்பாட்டில் அவர் நடித்தெல்லாம் காட்டமாட்டார். அந்தக் கேரக்டரின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருவது போல விவரிப்பார். அவர் சொல்லச் சொல்ல அந்தக் கதாபாத்திரத்திற்குள் நாம் ட்ராவல் ஆகிடுவோம். 

ஆர்யா போல ஒரு அபூர்வ நடிகரை பார்க்கவே முடியாது. அவர் மிக மிக பிரண்ட்லியான மனிதர். படப்பிடிப்பில் அவர் என்னிடம் ‘அப்படி நடிங்க; இப்படி நடிங்க’ என்று எதுவும் சொல்ல மாட்டார். ஆனால் எனது நடிப்பும் நல்லா வரணும் என்று மெனக்கெடுவார்.

உதாரணத்திற்கு அவர் எதிரில் நிற்கையில் எனக்கு மட்டும்  கேமரா வைத்து சஜேஷன் ஷாட் எடுக்கும்போது அவர் சும்மா நின்றால் போதும். ஆனாலும் அவர் நமது ரியாக்‌ஷன் பெஸ்ட்டாக வர வேண்டும் என்பதற்காக அவரும் நடித்துக் கொண்டிருப்பார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரவேண்டும் என்பதற்காக மெனக்கெடும் நடிகர்களை நான் பார்த்ததில்லை.

mahamuni-movie-stills-2

எங்கள் இயக்குநர் சாந்தகுமார் சார் படத் தொகுப்பில் இருக்கும்போது என்னை போனில் அழைத்து, ‘நீ நடித்த கேரக்டரில் வேற யாரையும் நினைச்சுப் பார்க்க முடியல…’ என்று சொன்னார். எனக்கு வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத பாராட்டு அது.

அடுத்து நான் நடித்திருக்கும் ‘ஐங்கரன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவில் ஜனரஞ்சகமான படமாக அது உருவாகி இருக்கிறது. விக்ரம் பிரவுடன் ‘அசுர குரு’ படத்திலும் நடித்திருக்கிறேன். மேலும் இரண்டு புதிய படங்கள் உள்பட ஒரு மலையாள படத்திலும் கமிட்டாகியுள்ளேன்.

இந்தந்த கதாபாத்திரங்களில்தான் நடிக்க வேண்டும் என்று எந்த வரையறையும் எனக்கில்லை. நான் நடிக்கணும் என்று மிகவும் ஆசைப்பட்டு சினிமாவிற்கு வந்தேன். அதனால் எனக்கு நடித்தால் மட்டும் போதும். ஐ லவ் ஆக்டிங்…” என்றார் உற்சாகமாக.




error: Content is protected !!