தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை தன்ஷிகா

தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை தன்ஷிகா

‘பேராண்மை’ படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகி இதுவரையிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார்.

இவர் நடித்திருந்த ‘சினம்’ என்ற குறும் படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம்’ குறும் படத்திற்கு கிடைத்தது.

மேலும் நார்வே திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’.

‘நார்வே சர்வதேச திரைப்பட விழா’வில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை சாய் தன்ஷிகா, இப்போது இன்னொரு சந்தோஷத்திலும் திளைக்கிறார்.

அது சாய் தன்ஷிகா முதல்முறையாக தெலுங்கு திரையிலகில் நாயகியாக கால் பதிக்கவிருக்கிறார் என்கிற சந்தோஷத்தில்தான். 

இது பற்றி நடிகை சாய் தன்ஷிகா பேசுகையில், “நான் தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கதாசிரியர்கள் எப்போது தங்களின் மனதில் நடிகைகளை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ, அந்த தருணம்தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது.

தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியரான கிரண் சமீபத்தில்  என்னைச் சந்தித்து, ‘உங்களை மனதில் வைத்து ‘மேளா’ என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின் நாயகியை மையப்படுத்திய திரைக்கதை. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இதனை உருவாக்கியிருக்கிறேன்.  நீங்கள்தான் இதில் நடிக்க வேண்டும்…’ என்று கேட்டுக் கொண்டார்.

கூடவே முழு கதையையும் சொன்னார். அதை கேட்டுவிட்டு பிரமிப்பில் ஆழ்ந்துவிட்டேன். அந்தளவிற்கு அந்தக் கதை என்னைக் கவர்ந்தது. உடனே அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இந்த ‘மேளா’ திரைப்படம்தான் நான் தெலுங்கில் அறிமுகமாகும் முதல் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தில் எனக்கு ஜோடி என்று யாருமில்லை. ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் சூர்யா தேஜ் நாயகனாக நடிக்கிறார். ஆலி, பரத்ரெட்டி, முனிஸ்காந்த், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

படத்தில் எனது கேரக்டர் பற்றி இப்போது நான் விரிவாக பேச முடியாது. படத்தில் நான் இரண்டு பரிமாணங்களில் நடிக்கிறேன். அதில் ஒரு கேரக்டரில் பேயாக நடிக்கிறேன். ஆனால் இரட்டை வேடமல்ல..

பொதுவாக நான் நடிக்கும் படங்களில் ஆக்சன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் நான் டூப் போடாமல் நடிப்பதைத்தான் விரும்புவேன். அதனால் இந்த படத்திலும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் ரோப் ஷாட் மற்றும் உயரத்திலிருந்து குதிப்பது போன்ற காட்சிகளில் நிஜமாகவே நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள அழகான பாடல் காட்சிகளிலும், நடன இயக்குநர் சந்திர கிரண் அவர்களின் நடன அமைப்பிற்கு ஏற்ப ஐம்பது முறைக்கு மேல் ஒத்திகை பார்த்து ஆடியிருக்கிறேன்.

தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததைபோல இந்த ‘மேளா’ படத்தின் மூலமாக தெலுங்கு ரசிகர்களின் மனதிலும் நிச்சயமாக நான் இடம் பிடிப்பேன்..” என்றார் உறுதியான குரலில்..!