“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..!

“விஜய்யுடன் நடிக்க வேண்டும்…” – நடிகை ஆஷிமா நார்வலின் ஒரே லட்சியம்..!

சமீபத்தில் வெளிவந்த ‘கொலைக்காரன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நார்வல். இவர் ‘மிஸ் ஆஸ்திரேலியா’ பட்டம் வென்றவர்.

ஆஷிமா நார்வலிடம் பேசியபோது தன்னுடைய திரையுலக வாழ்க்கை, அழகிப் போட்டி, சொந்த வாழ்க்கை, சமூகம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரது பேட்டி இது :

“நான் பிறந்தது இந்தியாவில். படித்தது ஆஸ்திரேலியாவில். படிக்கும்போது விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்கள் பிடிக்கும் என்றாலும், நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

படிப்பு முடித்ததும் ஆஸ்திரேலியாவில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது அங்கே அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட ஒரே இந்தியப் பெண் நான் மட்டும்தான்.

ashima-antondas3203

அந்த முதல் முயற்சியிலேயே ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா எலிகண்ட்’ பட்டம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தைப் பெற்றேன்.

அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன்.

அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்த படம்தான் ‘கொலைகாரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் தொடர்ச்சியாக ஹாட்ரிக் அடித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

ashima-antondas3039

‘கொலைகாரன்’ என்னுடைய கேரியரில் பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடையாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர்களுடைய சினிமா அனுபவம் எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

ஒரு படத்தின் வெற்றி என்பது ஒருவரை மட்டும் சார்ந்தது அல்ல. ஒரு படக் குழு ரயில் என்ஜின் போன்றது. நீண்ட ரயில் பெட்டிகளை என்ஜின் இழுப்பதுபோல் படக் குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இழுக்கும்போதுதான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அப்படி விஜய் ஆண்டனி, அர்ஜுன் உட்பட நாங்கள் குழுவாக இழுத்த காரணத்தால்தான் ‘கொலைகாரன்’ படத்துக்கு வெற்றி கிடைத்தது.

ashima-antondas3136

சினிமாவைப் பொறுத்தவரை என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். ‘கொலைகாரன்’ படம் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது. அதேபோல்தான் தெலுங்கில் நான் நடித்த ‘ஜெர்ஸி’, ‘கில்லர்’ போன்ற படங்களும் ஏராளமான தியேட்டர்களில் ரிலீஸானது.

சினிமாவில் வெற்றிதான் ஒரு நடிகர், நடிகையின் மார்க்கெட்டை நிர்ணயிக்கிறது. அப்படி என்னுடைய சமீபத்திய படமான ‘கொலைகாரான்’ வெற்றியடைந்ததால் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துள்ளது.

ashima-antondas3020

இப்போது ‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக  நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும், விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். படத்தில் எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் யானை நடிக்கிறது. யானையுடன் நடித்த காட்சிகள் சவாலாக இருந்தது. விலங்குகளின் டைமிங்கிற்கு ஏற்ப நடிப்பது உண்மையில் சவாலான விஷயம்.

ashima-antondas2745

போட்டி இல்லாத துறையே இல்லை. போட்டி இல்லை என்றால் உழைப்பும் குறைந்துவிடும். எந்த வேலையாக இருந்தாலும் அந்த இடத்தில் போட்டி இருக்க வேண்டும்.  போட்டி இல்லாமல் இருந்தால் நம்மிடம் ஏதோ குறை இருப்பது போல் தோன்றும்.

எனக்கு இண்டிரீயர் டிசைனிங் துறையில் ஆர்வம் அதிகம். மருத்துவமனை, வீடு என்று பல இடங்களில் இண்டிரீயர் பண்ணியிருக்கிறேன். தவிர, பர்னிச்சர் பிசினஸ் பண்றேன். விரைவில் டூரிசம் சார்ந்த பிசினஸிலும் கால் வைக்கப் போகிறேன்.

எனக்கு திருமணத்தில் முழு நம்பிக்கை உண்டு. திருமணம்தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. திருமணம் சிலருக்கு சீக்கிரம் நடக்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் ஆண், பெண் இருவருக்குமே வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேண்டும்.

ashima-antondas2903

நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’  உடபட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.

தமிழ் சினிமாவை மற்ற மொழிகளுடன் ஒப்பீடு செய்யும் போது தமிழ் படங்களின் தரம் வேறு லெவலில் இருப்பதை பார்க்க முடிந்தது.

சினிமாவுக்கு வந்த பிறகு குறிப்பிட்ட கேரக்டரில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்ல முடியாது. ஒரு நடிகையாக எல்லா கேரக்டரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன்..” என்றார்.




error: Content is protected !!