ஹாலிவுட் தரத்தில் தயாரான தமிழ்ப் படம் ‘விவேகம்’ – விவேக் ஓபராய் பெருமிதம்..!

ஹாலிவுட் தரத்தில் தயாரான தமிழ்ப் படம் ‘விவேகம்’ – விவேக் ஓபராய் பெருமிதம்..!

இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர்தான் விவேக் ஓபராய். இவருடைய தாயாரின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதால் தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர்.

சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்தபோது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.

தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோவான அஜித் படத்தில் நடிக்க அழைப்பு வந்தவுடன் ‘விவேகம்’ படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார்.

வரும் ஆகஸ்டு 24-ம் தேதி வெளியாக இருக்கும் ‘விவேகம்’ படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது பகிர்ந்து கொண்டார்.

vivek oberai 

“இப்போதெல்லாம் என்னுடைய பெரும்பாலான நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு என்று பிரித்து, பிரித்து செலவு செய்து வருகிறேன். இதனால் ஹிந்தியிலேயே படங்களை தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன்.

இயக்குனர் சிவா என்னை சந்தித்து இந்த ‘விவேகம்’ படத்தின் கதையைச் சொன்னபோது 15 நிமிடங்கள்தான் கேட்டேன். பாதி கதையுடன் நிறுத்திவிட்டு ‘இதுவே போதும்… நான் நடிக்கிறேன்’ என சொல்லி விட்டேன். மொத்தக் கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரிதான் என்பதை ‘விவேகம்’ படத்தில் நடித்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது.

‘விவேகம்’ கதையை கேட்ட பிறகு, அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோவுக்கும், இயக்குநருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது. ஆன்மீக புரிதலும் எங்களுக்குள் சரியாக அமைந்தது. 

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக இதில் நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, ‘விவேகம்’ ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம்.

vivek oberai

முதலில் தமிழ் மொழியில் பேசி நடிப்பதுதான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசிதான் நடித்தேன். இந்த படத்தில் நான் டப்பிங் பேசவில்லை, பிரின்ஸ் என்பவர் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்காக அவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். 

அஜித் அண்ணாவை முதல்முறையாக பல்கேரியாவில்தான் சந்தித்தேன். அஜித் என்னைப் பார்த்தவுடனேயே ‘இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னதற்கு நன்றி’ என்றார் என்னிடம்..  ‘இந்த படத்தில் நடிப்பது எனக்குத்தான் பெருமை’ என்றேன். நான் ஷாலினியின் தீவிர ரசிகன் என்பதையும் சொன்னேன். ஷாலினி அவருடைய சிறிய வயதில் என்னுடைய தந்தையுடன் அவரது மகளாக ஒரு ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். இதனை நான் அஜித்திடம் நினைவு கூர்ந்து பேசினேன்.

அஜித் படப்பிடிப்பில் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் அவரே டீ ஊற்றி கொடுப்பார். அஜித் அண்ணாவுடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. 

காஜல் அகர்வால் நடித்த முதல் படமே என்னோடுதான். பல வருடங்கள் கழித்து மீண்டும் விவேகம் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. துள்ளலான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் இதில் மிகவும் சென்சிட்டிவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அக்‌ஷராவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த பின்பு கமல் ஸார், சரிகா, ஸ்ருதிஹாசன் எல்லோரும் அக்‌ஷராவை நினைத்து நிச்சயம் பெருமைப்படுவார்கள். 

vivegam-poster-2

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்..?

ஸ்டைல் கிங் ரஜினி சார், நடிப்பின் உச்சம் கமல் சார் எல்லோருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவின் சொத்து, இந்தியாவின் பெருமை. 

சென்னை எனக்கு எப்போதும் பிடித்த இடம். என்னுடைய உறவினர்கள் பலரும் இங்குதான் வசிக்கிறார்கள். சின்ன வயதில் இங்குதான் சைக்கிளில், காரில் எல்லாம் பயணித்திருக்கிறேன். டைலர்ஸ் ரோட்டில் சுற்றியிருக்கிறேன். அந்த நேரத்தில்  இப்போது பேசுவதைவிட நன்றாக தமிழ் பேசினேன்.

மும்பையில் எங்கள் வீட்டில் தினமும் தென்னிந்திய உணவான இட்லி, தோசைதான் காலை உணவு. தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிப்பவன் நான்.

vivek oberai

அமேசான் பிரைமில் இன்சைட் எட்ஜ் என்ற மேடை நாடகத்தை நான் நடத்தினேன். பலரும் நான் சின்னத் திரையில் ஏன் நடிக்கிறேன் என கேட்கிறார்கள். என் வேலையை நான் ரசித்து செய்கிறேன். திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2.25 கோடிதான்.

ஆனால் இப்போது 40 கோடி மக்கள் மொபைல் ஃபோன் வைத்திருக்கிறார்கள். அவர்களை சென்றடைய ஈஸியான வழி அமேசான் போன்ற சின்னத்திரைதான். அமேசான் சி.இ.ஓ. என்னுடைய ஷோ பல ஆங்கில தொடர்களைவிட அதிக வரவேற்பு பெற்றதாக அறிவித்திருக்கிறார். இதைவிட வேறென்ன வேண்டும்…?

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என்றெல்லாம் இனி இல்லை. ‘பாகுபலி’ என்ற டப்பிங் படம் ‘டங்கல்’ என்ற இந்தி படத்தைவிட அதிகம் வசூல் செய்திருக்கிறது. அதனால் இனிமேலெல்லாம் ஒரே சினிமாதான். 

சுனாமியால் பாதிக்கப்பட்டு, நான் கட்டிக் கொடுத்த வீட்டில் வளர்ந்த ஒருவர் டெல்லியில், ஒரு விழாவில் என்னை சந்தித்து ‘அந்த வீட்டில் வளர்ந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்’ என்று கூறியது நெகிழ்ச்சி அளித்தது. நான் வாங்கிய விருதுகளிலேய இதுதான் உயரிய விருது.

உத்திரபிரதேசத்தில் குழந்தைகளை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு வருகிறோம். ஒரு பள்ளியை ஆரம்பித்தது, இன்று 3 பள்ளிகள் மூலம் 2000 குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வருகிறோம். இந்த சேவைகள் செய்வதே போதும், அரசியலுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒரு அரசியல் இயக்கத்தின் சார்பு இருந்தால் எந்த சேவையும் செய்ய முடியாது.

சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ பார்த்தேன். ‘பில்லா’, ‘சகலகலாவல்லவன்’ என பழைய கிளாசிக் படங்களை ரசித்திருக்கிறேன். சமீப காலங்களில் ‘ஆரண்ய காண்டம்’, ‘வீரம்’, ‘வேதாளம்’ போன்ற தமிழ் படங்களை பார்த்து ரசித்தேன்…” என்றார் விவேக் ஓபராய்.