“சேரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்…” – விஷால் எச்சரிக்கை..!

“சேரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்…” – விஷால் எச்சரிக்கை..!

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினரும், நடிகரும், இயக்குநருமான சேரன் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

மேலும், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என்று சேரன் தலைமையில் பல தயாரிப்பாளர்கள் கோரிககை எழுப்பி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஷால், சேரனி்ன் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லும்விதமாய் இன்று ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கை இது :

இயக்குநர் சேரன் அவர்கள் மீது நான் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறேன். ஆனால் சமீபகாலமாக அவர் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.

ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக்கூடாது என்று எந்த சட்ட விதியும் இல்லை. இது எனது தனிப்பட்ட முடிவு.

சேரனின் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நான் தேர்தலில் போட்டியிடுவதாலேயே அரசாங்கம் தயாரிப்பாளர் சங்கத்தை பழி வாங்கும் என்பது ஜனநாயகத்துக்கே எதிரான குற்றச்சாட்டாகத்தான் பார்க்கிறேன். சேரனின் வாதம், இன்றைய மற்றும் முன்னாள் அரசுகளையும், முன்னாள் சங்க நிர்வாகிகளையும் கொச்சைப்படுத்துவது போல் இருக்கிறது. 

எப்போதுமே உரிமைகள் என்பவை கெஞ்சிக் கேட்டு பெற வேண்டியவை அல்ல. அவை குரல் எழுப்பி பெற வேண்டியவை என்று நம்புகிறவன் நான். அதன்படிதான் செயல்படுகிறேன்.

ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவதும் அப்படி மக்களின் சார்பில் அவர்களுக்காக குரல் எழுப்பத்தான்.  என்னுடைய நண்பர்களையும், சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தேன். எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

அதை விடுத்து கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்கவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கத்தில் அனுமதிக்கவே முடியாது.

இனிமேலாவது சேரன் திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு, ஆரோக்கியமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.

சேரனின் செயல்கள் தொடர்ந்தால், சங்க விதிகள்படி அவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்.”

 – இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.