“போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு பஞ்சாயத்து பண்றாங்க” – தயாரிப்பாளர் சங்கம் பற்றி விஷாலின் கமெண்ட்..!

“போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டு பஞ்சாயத்து பண்றாங்க” – தயாரிப்பாளர் சங்கம் பற்றி விஷாலின் கமெண்ட்..!

நேற்று அவசரமாகக் கூடிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை ஒரு பேட்டியில் தரக்குறைவாகப் பேசியதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பலர் கொந்தளித்தார்கள்.

கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மையோரின் ஆதரவுடன் விஷால் ஒரு வாரத்திற்குள்ளாக வருத்தம் தெரிவிக்காவிட்டால் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

நடிகர் விஷால் அப்படியென்னதான் பேட்டியளித்திருக்கிறார்..?

சென்ற வாரத்திய ஆனந்தவிகடனில் வெளிவந்த நடிகர் விஷாலின் சர்ச்சைக்குரிய பேட்டி இதுதான் :

"நிறைய சினிமாக்கள்... அதில் பலரும் லாபம் அடைஞ்சாலும் தயாரிப்பாளர் மட்டும் நஷ்டம் அடைகிறார். அதுக்கு என்ன காரணம்..?"

"அதுக்கு தயாரிப்பாளர்களும் தயாரிப்பாளர் சங்கமும்தான் காரணம். ஓர் இழப்பு எப்படி வருது? அதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? அவசியம் இல்லாத செலவுகளை எப்படித் தவிர்க்கலாம்? திருட்டு விசிடி-யினால் எவ்வளவு இழப்பு? திருட்டு விசிடி விக்கிறவங்களை என்ன பண்ணலாம்? வருமானம் வரக் கூடிய இடங்கள் எவை? மும்பையில் ரிலீஸான 15-வது நாளே ஒரு படத்தின் டிவிடி-யை அதிகாரபூர்வமா ரிலீஸ் பண்ணுவதுபோல நாம பண்ணலாமா? ரிலீஸ் ஆன ஒரே மாசத்துல சிங்கிள் சாட்டிலைட் டெலிகாஸ்ட் ரைட்ஸ் கொடுப்பதுபோல நாம பண்ணலாமா? கமல் சார் சொன்ன மாதிரி முதல் நாளோ, 10-வது நாளோ, படத்தை டி.டி.ஹெச்-க்குக் கொடுத்து வருமானம் பண்ணலாமா? நெட் ஃபிளிக்ஸ், ஹீரோ டாக்கீஸ் போன்ற ஆன்லைன்கள்ல நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணலாமா...?

இப்படி எந்த நல்ல விஷயம் பேசி முடிவு பண்ணலாம்னு கூப்பிட்டாலும் சங்கத்துல யாரும் வர மாட்டேங்கிறாங்க. ஆனா, ‘சார், எனக்கு ஒரு பஞ்சாயத்து. அந்த ஹீரோ 50 லட்சம் பாக்கி வெச்சிருக்கார்’னு சொன்னா போதும். ‘வாங்க வாங்க எல்லாரும் கூடலாம். போண்டா பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பஞ்சாயத்துப் பண்ணலாம்’னு உட்கார்ந்துடுறாங்க. இதுதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப் புள்ளி.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்துக்கு சுயநலம் இல்லாத ஆட்கள் வரணும். ஆக்கபூர்வமான விஷயங்களைத் திறந்த மனதுடன் செய்தாலே, தமிழ் சினிமா செழிப்பா இருக்கும்."

vishal "அப்ப நடிகர் சங்கம் மாதிரி வரும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் இளம் தயாரிப்பாளர்கள் போட்டியிடுவீங்களா?"

"தற்போதைய நிர்வாகத்தை நாங்க 100 சதவிகிதம் மதிக்கிறோம். ஆனா, நாங்க எதிர்பார்த்த ஆக்கபூர்வமான வேலைகள் எதுவுமே நடக்கலை. எப்படி நடிகர் சங்கத்தைக் கையில எடுத்துக்க வேண்டிய ஒரு சூழல் வந்துச்சோ, அந்த மாதிரி ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்லயும் போட்டியிடுற சூழல் இப்ப வந்திருக்கு.

இது பதவிக்காக அல்ல. மறுபடியும் இளைஞர்கள் திரளணும்கிற அவசியமும் இல்லை. ஒவ்வொரு தயாரிப்பாளர்கள் மனசுக்குள்ளயும் இந்த எதிர்ப்பு உணர்வு இருக்கு. அது ஜனவரி மாசம் நிச்சயமா வெடிக்கும். அது 100 சதவிகிதம் உறுதி. ஏன்னா, தமிழ் சினிமா எங்க தாய்; சோறு போடுற தெய்வம். அதைக் காப்பாத்தணும்னா, எங்களுக்கு வேறு வழி இல்லை."

என்று பேட்டியளித்திருக்கிறார் விஷால்.

ஜனநாயக நாட்டில் தேர்தல் தவிர்க்க முடியாத்து. ஆரோக்கியமானதுதான். தேர்தல் போட்டி என்பது கடைசியாக உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்திவிடக் கூடாது. அவ்வளவுதான்..!

விஷால் கடைசியாக சொல்லியிருக்கும் இன்னொரு விஷயமும் அட்டகாஷ் பதிவுதான். ஆனால் இது ஏன் இன்னமும் இணையத்தில் வைரலாகவில்லை என்று தெரியவில்லை.

vishal-varalakshmi-2

"வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போ?" "வரலட்சுமியும் நானும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் கல்யாணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் கல்யாணம். இப்பவே கார்த்தியிடம் சொல்லி புக் பண்ணிட்டேன். வந்து வாழ்த்துங்க...!"

வாழ்த்துகள் விஷால்..!

நன்றி : ஆனந்தவிகடன் வார இதழ்