“மெர்சல் பட விவகாரம் -இது கருத்து சுதந்திரத்திற்கெதிரான மிரட்டல்” – நடிகர் விஷால் கருத்து

“மெர்சல் பட விவகாரம் -இது கருத்து சுதந்திரத்திற்கெதிரான மிரட்டல்” – நடிகர் விஷால் கருத்து

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. திட்டம், பண மதிப்பிழப்பு திட்டம் போன்ற மத்திய அரசின் திட்டங்களை கிண்டலடித்து இருக்கும் காட்சிகளை நீக்கச் சொல்லி தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் கடந்த மூன்று நாட்களாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மிரட்டலுக்கு பயந்து போன தயாரிப்பாளர் முரளி ராமசாமியும். இதனை ஏற்றுக் கொண்டு அந்தக் காட்சிகளை நீக்கிவிடுவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் பா.ஜ.க.வினரின் இந்த எதேச்சதிகார போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

“மெர்சல்’ படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்!

‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் அந்த வசனங்களையும் காட்சிகளையும் நீக்க சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே பார்க்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம்.

ஒரு அரசியல் கட்சி ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும் வசனங்களையும் தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு என்பது எதற்கு இருக்கிறது?

சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.

தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது.

– விஷால்
தலைவர் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
பொதுசெயலாளர் – தென்னிந்திய நடிகர் சங்கம்”