சம்பளப் பிரச்சினை.. தயாரிப்பாளர்-ஹீரோ மோதல்..!

சம்பளப் பிரச்சினை.. தயாரிப்பாளர்-ஹீரோ மோதல்..!

‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வினய். இவர், ‘ஜெயம் கொண்டான்’, ‘மோதி விளையாடு’, ‘ஒன்பதுல குரு’, ‘அரண்மனை’ ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இவர் நடித்துள்ள புதிய படம், ‘சேர்ந்து போலாமா.’ இந்த படத்தில் வினய்க்கு ஜோடியாக மதுரிமா நடித்து இருக்கிறார். அனில் குமார் இயக்கம் செய்ய, சசி நம்பீசன் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடைபெற்றது. அப்போது, வினய் தனது சம்பளத்தின் பாக்கி தொகையான 17 லட்சம் ரூபாயை உடனே தர வேண்டும் என்று கேட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத்திலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் பட தயாரிப்பாளர் சசி நம்பீசன் புகார் செய்து இருக்கிறார்.

இது பற்றி அவர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

“சின்ன வயதில் நட்பாக இருந்த ஒரு ஆணும், பெண்ணும் பின்னர் பிரிந்து விடுகிறார்கள். இரண்டு பேரும் 25 வயதில், மீண்டும் சந்திக்கிறார்கள். ஒரு இடத்துக்கு சேர்ந்து பயணிக்கிறார்கள். அப்போது, ஒரு கொலை நடக்கிறது. கொலையாளி யார் என்பதுதான் கதை.

படத்தின் பெரும்பகுதி காட்சிகள் நியூசிலாந்தில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் படப்பிடிப்பு முழுவதையும் அங்கேயே நடத்தினோம். இதற்காக வினய் உள்பட படக் குழுவினர் அனைவரையும் நியூசிலாந்துக்கு அழைத்து சென்று படப்பிடிப்பை நடத்தினேன்.

வினய்க்கு பேசியபடி, சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். மீதி தொகையை கடைசி நாள் படப்பிடிப்பின்போது தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தப்படி வினய் நடந்து கொள்ளவில்லை.

திடீரென்று ஒரு நாள், ‘பாக்கிப் பணம் 17 லட்சத்தை உடனடியாக என் வங்கி கணக்கில் போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன்’ என்று கூறி, படப்பிடிப்பை நிறுத்தி விட்டார். இதனால், ஷூட்டிங் தடைபட்டு எனக்கு பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது.

நியூசிலாந்தில் வினய்க்கு ‘பி.எம்.டபிள்யூ’ கார் கொடுத்து, ஊரை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தேன். அப்படி கவனித்துக் கொண்டபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் மறுத்து விட்டார்…” என்று குற்றம் சாட்டினார் தயாரிப்பாளர் சசி நம்பீசன்.

இது பற்றி நடிகர் வினய்யிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில் வேறாக இருந்த்து..

வினய் தன் பதிலில், “சேர்ந்து போலாமா’ படப்பிடிப்பை நியூசிலாந்தில் நானாக நிறுத்தவில்லை. என்னை மிரட்டுவதற்காக, அந்த தயாரிப்பாளர் செய்த நாடகம் அது.

விளம்பர நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று அவர் சொல்கிறார். படத்தில், என்னை பேச வைக்காமல், எனக்குப் பதில் வேறு ஒருவரை ‘டப்பிங்’ பேச வைத்து இருக்கிறார்.

நியூசிலாந்தில் எனக்கு தங்கும் வசதியும், சாப்பாடு வசதியும் சரியாக செய்து தரவில்லை. இது பற்றி நான் நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறேன்.

ஒப்பந்தத்தின்படி, எனக்கு தயாரிப்பாளர் சசி நம்பீசன் ரூ.10 லட்சத்து 70 ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சினையில், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தலையிட்டு, என் சம்பளத்தில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை விட்டுக் கொடுக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி, நானும் அந்த தொகையை விட்டுக் கொடுத்துவிட்டேன். மீதி 4 லட்சத்து 50 ஆயிரத்தை தருவதாக முன்பு ஒப்புக் கொண்ட தயாரிப்பாளர் சசி நம்பீசன், இப்போது ‘அந்த தொகையையும் தர முடியாது. உன்னால் முடிந்ததை செய்’ என்று என்னை மிரட்டுகிறார்..” என்று புகார் சொல்லியுள்ளார்.

இந்தப் பஞ்சாயத்துல கடைசீல படத்துக்கு பிரஸ்மீட்டே வைக்கலை. அதைவிட அதிக விளம்பரம் ‘இது’ல கிடைச்சிரும்ன்னு தயாரிப்பாளர் நம்பிட்டாரு போலிருக்கு..!

‘சேர்ந்து போலாமா’ன்னு டைட்டில் வைச்சிட்டு இப்படி ஆளுக்கொரு பக்கம் போனீங்கன்னா எப்படிங்கண்ணா..?




error: Content is protected !!