நடிகர் விக்ரம் பிரபுவும் தயாரிப்பாளரானார்..!

நடிகர் விக்ரம் பிரபுவும் தயாரிப்பாளரானார்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமாகிய, நடிகர் விக்ரம் பிரபுவும் தயாரிப்பாளராகிவிட்டார்.

‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’(First Artist) என்கிற பெயரில் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவக்கியுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இதன் முதல் தயாரிப்பாக தானே ஹீரோவாக நடிக்கும் ‘நெருப்புடா’ என்ற திரைப்படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார் விக்ரம் பிரபு.

இந்தப் படத்தில், விக்ரம் பிரபு ஒரு தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக நிக்கி கல்ரானி நடிக்கிறார். மேலும் பொன்வண்ணன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனன் ராவ், நாகி நீடு ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் - R.D. ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ரோக்கேஷ், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஸ்டில்ஸ் – நரேன், டிஸைனர், சபீர், தயாரிப்பு - விக்ரம் பிரபு, இசக்கி துரை, R.K.அஜெய்குமார்,  எழுத்து, இயக்கம் – பி.அசோக்குமார்.

இந்தப் படத்தின் பூஜையும், தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவும் இன்று காலை தி.நகரில் உள்ள நடிகர் திலகத்தின் பூர்வீக வீடான அன்னை இல்லத்தில் நடைபெற்றது.

neruppuda function

வீட்டின் முன்புறம் உள்ள புல்வெளி தோட்டத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு மிகச் சிறப்பாக துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், தாணு இருவரும் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர்ப் பலகையை ஏவி.எம்.சரவணனும், படத்தின் தலைப்பை தாணுவும் திறந்து வைத்தனர்.

_MG_3122

ஏற்கெனவே 50 ஆண்டு காலமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். 'சாந்தி பிலிம்ஸ்' என்கிற பெயரில் சிவாஜியே படங்களைத் தயாரித்து வந்துள்ளார்.

இதன் பின்பு 'சிவாஜி பிலிம்ஸ்' பெயரில் நடிகர் பிரபுவும், அவரது அண்ணன் ராம்குமாரும் இணைந்து சில படங்களை தயாரித்துள்ளனர்.

சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த், தனது மனைவி அபிராமியுடன் இணைந்து 'இஷான் புரொடெக்சன்ஸ்' என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 'மீன் குழம்பும் மண்பானையும்' என்கிற படத்தைத் தற்போது தயாரித்து வருகின்றனர்.

இந்த வகையில் விக்ரம் பிரபு தற்போது துவக்கியிருக்கும் 'பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்' நிறுவனம். சிவாஜியின் குடும்பத்தில் இருந்து வருகின்ற 4-வது தயாரிப்பு நிறுவனமாகும்,