“என் சம காலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா..?” – நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனசு..!

“என் சம காலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா..?” – நடிகர் விஜய் சேதுபதியின் பரந்த மனசு..!

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், கிஷோர், சதீஷ் நடித்துள்ள படம் 'றெக்க'. இந்தப் படத்தை 'காமன்மேன்' பி.கணேஷ் தயாரித்துள்ளார். ரத்தின சிவா இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தின் பத்திரிகையாளர்  சந்திப்பு நேற்று மதியம் வடபழனி பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி ஊடகங்களிடம் கலகலப்பாகப் பேசினார்.

img-126

அவர் பேசும்போது, "இந்த 'றெக்க' எனக்கு ஆறாவது படம்.  பார்த்தால் இரண்டு வாரத்துக்கு ஒரு படம் வருவது போலத்தான் தோன்றும். ஆனால் ஒரு படத்தில் நடிக்க குறைந்தது மூன்று மாதங்களாவது தேவை. ஆண்டுக்கு ஆறு படம் என்று என்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்கள். ஆனால் இந்த சதீஷ் நடித்து ஒரே நாளில் 'றெக்க', 'ரெமோ', 'தேவி' என மூன்று படம் வருகிறதே... அதைப் பத்தி யாராவது கேட்கிறார்களா..?

dcim-92 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் என்னுடன் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஒன்றாகப் படித்தவர். அவருக்குப் பெரிய பின்னணி இல்லை. நடுத்தர வர்க்கத்துக்காரர்தான். ஆனால் முடிவு எடுப்பதில் தெளிவானவர். யாருடனும் விவாதிக்க மாட்டார். தெளிவான முடிவெடுப்பார். எனக்கு இவ்வளவுதான் வியாபாரம். இவ்வளவுதான் செலவு செய்ய  வேண்டும் என்று நினைக்கவில்லை. தைரியமாகச் செலவு செய்தார்.

சிவாவின்  'வா டீல்' படத்தின் ட்ரெய்லரை பார்த்துப்  பிடித்துப் போய்தான் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்தேன். ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு படத்தில் நடித்தேன்.

dcim-97

விஜய் சேதுபதி நடிப்பதெல்லாம் கமர்ஷியல் படமா என்று கேட்சிறார்கள். கமர்ஷியல் படம் என்றால் சாதாரணம் இல்லை. கமர்ஷியல் படத்துக்கும் கதை தேவை. வெறுமனே கதாநாயகன் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கும் கதை வேண்டும்.

இந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று என்னைச் சுற்றி ஒரு கட்டம் போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஒரே மாதிரி நடித்தால் எனக்கே போரடித்துவிடும். பார்க்கிறவர்களுக்கும் போரடித்துவிடும்.

img-107

'றெக்க' என்  முந்தைய எந்தப்பட சாயலும் இல்லாத படம்.  பேண்டஸி  என்றால் நம்ப முடியுமா என்று கேட்கிறார்கள்.  இது ஒரு கற்பனை  அவ்வளவுதான்.. நானும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் மாதிரி நினைத்துப் பார்த்திருக்கிறேன். நாம்கூட ஒருவனை அடித்து துவைப்பது போல கனவு காண மாட்டோமா..? அது இயல்பாக சாத்தியமில்லை என்றாலும் கனவு காண மாட்டோமா..? அதுபோல்தான் இந்தப் படமும்.

என் பார்வையில் இந்த 'றெக்க' படத்தையும் ஒரு பேண்டஸி படமாகத்தான் பார்க்கிறேன். பேண்டஸியையும்  யதார்த்தமாகத்தான் பார்க்கிறேன். இப்படித்தான் சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன். நிஜமாக என்னை நாலு பேர் அடிக்க வந்தால் ஓடிவிடுவேன். நானே நாலு பேரை அடிக்கிறேன் என்றால் அது நம்ப முடியுமா..? இப்படத்தில் நானே ஹரீஷை தூக்கி அடிக்கிறேன் என்றால் அது  முடியுமா..? அதுதான் பேண்டஸி.

இந்தப் படம் ஒரு மாஸ் படமாகவும் உருவாகியுள்ளது. இப்படி ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கும்போது செமயா இருந்தது. ஜாலியாகவும் இருந்தது. இதில் ஒரு போதையும் இருந்தது. 'தர்மதுரை'யும் 'ஆண்டவன்  கட்டளை'யும்கூட கமர்ஷியல் படங்கள்தான்.

dcim-53

'ஆண்டவன்  கட்டளை' படத்தை நாங்கள்கூட அந்த அளவுக்கு ரசிக்கவில்லை.  பாராட்டி எழுதிய பத்திரிகையாளர்களின் எழுத்தில் இருந்த ரசனையைக் கண்டு வியந்தேன். பத்திரிகையாளர்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுவார்கள். இல்லையென்றால் கழுவி, கழுவி ஊற்றுவார்கள். இது தவிர்க்க முடியாததுதான்..

என்னுடன் இதில் நடித்ததுள்ள ஹரீஷ் உத்தமன் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் 'தா' படத்தில் நாயகனாக நடித்தபோது நான் அவர் நடிப்பைப் பார்த்துப் பொறாமைப்பட்டேன். அடடா.. முதல் படத்திலேயே இப்படி ஒரு நடிப்பா.. என வியந்தேன். ஹரீஷ் திரும்பவும் கதாநாயகனாக வர வேண்டும். அவரை வைத்துப் படம் செய்ய எனக்கும் ஆசை. அவர் ஒரு முழுமையான நடிகர்.

dcim-81

இந்தப் படத்தில் சதீஷ் நடித்துள்ளது என் பாக்கியம். அவரை சீரியஸாவும் நடிக்க வைக்க முயன்றிருக்கிறோம். லட்சுமி மேனன் பற்றிச் சொல்ல வேண்டும் அவர் ஒரு சென்சிபிள் ஆர்ட்டிஸ்ட். அறிவுள்ள நடிகை . அன்று நடிக்கப் போகும் காட்சி, மனநிலை, சூழல், வசனம் எல்லாம் கேட்டுத் தயாரான பிறகுதான் நடிப்பார். வசனத்துக்காக தமிழைக் கற்றுக் கொண்டு நடிக்கிறார்.

கிஷோர் 'வெண்ணிலா கபடிக் குழு'வில் நடித்தபோது நான் துணை நடிகர். ஆனால் அன்று முதல் இன்றுவரை அப்படியே இருக்கிறார். மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர். ஸ்ரீஜா ரோஸ் என்னைவிட 8 வயது சின்னவர். ஆனால் படத்தில் எனக்கு அக்காவாக நடித்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார் சார் பெரிய இயக்குநர். ஆனால் அது தெரியாமல் எளிமையாக இருந்தார். அவர் ஒரு சக்தி வங்கி எனலாம். ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர்  தான் நினைத்தது மாதிரி காட்சி வராமல் விடமாட்டார். 

dcim-95

ராஜு சுந்தரம் மாஸ்டர் 800 படங்கள் செய்தவர்.  இப்படத்தில் அவர் தந்த உழைப்பு அபாரம். ஒளிப்பதிவாளர் தினேஷ் எல்லாவற்றையும் ரொம்ப அழகாகக் காட்டியிருக்கிறார். இமான் இளிமையான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

'றெக்க' படத்தின் பாடல் காட்சியில் சிவகார்த்திகேயனின் படத்தைக் காட்டியிருக்கிறோம். இது போன்ற தியேட்டர் சிச்சுவேஷன் பாடல் காட்சிகளின்போது எம்..ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று எல்லாரையும் காட்டி விட்டார்கள். என் சமகாலக் கலைஞன் சிவகார்த்திகேயனை நான் கொண்டாடக் கூடாதா..? அதனால் நான்தான் சிவாவின் போஸ்டரை வைக்கச் சொன்னேன். அதிலும் அந்த சிவாவின் போஸைகூட டான்ஸ் மாஸ்டரிடம் சொல்லி ஒரு ஷாட் எடுக்கச் சொல்லி சேர்த்திருக்கிறேன்.

ரெண்டு படங்களும் ஒரே நாள்ல ரிலீஸாவது தவிர்க்க முடியாத்து. விடுமுறை தினங்கள் நிறைய இருப்பதால் ரெண்டுமே ரிலீஸாக வேண்டிய கட்டாயம். ‘ரெமோ’ டிரெயிலர் பார்த்துட்டு அசந்துட்டேன். சிவா ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சிருக்கார். அப்பவே அவருக்கு போன் ‘பண்ணி ‘சூப்பரா இருக்கு சிவா’ன்னு பாராட்டினேன்.. ரெண்டு படங்களுமே ஓடட்டுமே.. யார் வேண்டாம் என்று சொன்னது..? எனக்கு ‘ரெமோ’வும் ஓடணும். என்னோட ‘றெக்க’யும் ஓடணும். இதுதான் என்னோட ஆசை..” என்று சொல்லி முடித்தார் விஜய் சேதுபதி.