full screen background image

இந்தப் படத்தில் நடித்தமைக்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது உறுதியாம்..!

இந்தப் படத்தில் நடித்தமைக்காக பாரதிராஜாவிற்கு தேசிய விருது உறுதியாம்..!

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. இந்த படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று காலை சென்னையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் படத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் கதாநாயகன் விதார்த், “இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்தப் படத்தில் மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு நிறைய காம்பினேஷன் காட்சிகள் இல்லை. ஆனால், அவரது காட்சிகள் படப்பிடிப்புக்கு நடக்கும்போது அருகில் இருந்து கவனிப்பேன். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் நிச்சயமாக இந்த படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது நிச்சயம் வாங்குவார்…” என்றார்.

Kurangu Bommai Press meet (25)

மேலும் விதார்த் பேசுகையில், “இந்த படம் மிக சிறப்பான படம். நித்திலன் மிக திறமையான இயக்குநர். இந்த படத்தில் நான் நடித்திருப்பதால் எனக்கு நான்கு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதோடு, நான் இப்போது இயக்குநர் இமயம் இயக்கும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இது எல்லாம் அமைய நித்திலனும் இந்த ‘குரங்கு பொம்மை’ படமும்தான் காரணம். எனவே நித்திலனுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த படம் உருவாக என் நண்பர்கள் கண்ணன் மற்றும் கர்ணா ராஜா  இருவரும் மிக முக்கியமான காரணமாக இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதிராஜா படத்தில் நடிப்பது அவ்வளவு கஷ்டம்.. சம்பளம் தர மாட்டார்.. திட்டுவார்.. அடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால், பாரதிராஜா அவர்கள் என்னிடம் கதை சொன்னதும் உனக்கு இவ்வளவு இலட்சங்கள் சம்பளம் தருவேன் என்று ஒரு நல்ல தொகையை சொன்னார். நானும் சரி என்றேன்.

அன்றைய சூழலில் அவர் என்ன தொகை சொன்னாரோ, அதே அளவு தொகையை ஒரு கடன்காரருக்கு நான் உடனடியாக கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நான் இருந்தேன்.

பாரதிராஜா சார் என்னை அழைத்து கதை சொல்லி, எனக்கு அட்வான்ஸ் பணத்தை செக்காக கொடுத்தார். சம்பளமாக சொன்ன தொகையில் ஒரு கால்வாசியை அட்வான்ஸ் செக்காக கொடுத்திருப்பார் என்று நினைத்தேன். ஆனால் சம்பளமாக பேசிய முழுத் தொகையையும் ஒரே செக்காக கொடுத்தார்.

நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. உடனே அந்த செக்கை வைத்து என் கடனை திருப்பிக் கொடுத்து அந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பித்தேன். அதே மாதிரி அவ்வளவு அழகாக அன்பாக நடிக்கச் சொல்லிக் கொடுத்தார். அந்தப் படம் வந்ததும் என் வளர்ச்சி அடுத்த லெவலுக்கு கண்டிப்பாக போகும்…” என்றார்.

Kurangu bommai audio launch (9)

நிகழ்ச்சியில் பேசிய ஹீரோயின் டெல்னா டேவிஸ், “எல்லாருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத்தான்.

எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப்போல ஒரு ஜர்னலிஸ்ட் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம்.

நான் எப்படியானாலும் சரி.. இனிமேல் நான் எங்கு பேசினாலும், ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதாநாயகி நான் என்றுதான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை ‘குரங்கு பொம்மை’ படம் வாங்கித் தரும் என்று நம்புகிறேன்..” என்றார் கதாநாயகி டெல்னா டேவிஸ்.

 

Our Score