ஒரு மாதம் தாடி வளர்த்தால் ஹீரோ கேரக்டர் உறுதியாம்..!

ஒரு மாதம் தாடி வளர்த்தால் ஹீரோ கேரக்டர் உறுதியாம்..!

‘மைனா’, ‘சாட்டை’ போன்ற தரமான படங்களை தயாரித்த ஜான்மேக்ஸின் ஷாலோம் ஸ்டுடியோ பட நிறுவனம் தயாரிக்கும் ‘மொசக்குட்டி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் புதுமுகம் வீராவின் திரையுலக அறிமுகக் கதை இதுதான்..!

“எனக்கு சின்ன வயது முதலே சினிமா மீது ஆர்வம் அதிகம். ஆனாலும் படிப்புதான் என் முதல் சாய்ஸ் என்று படித்து முடித்தேன். எங்கள் குடும்பத்தில் யாருமே சினிமாவில் இல்லை. நான் மட்டுமே வந்திருக்கிறேன்.  நடிப்புன்னு இறங்கினால் அதற்கான முழு தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தேன்.. தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சி பெற்றேன். ஆக்சன் பிரகாஷிடம் சண்டை பயிற்சி பெற்றேன். பல மாஸ்டர்களிடம் நடனமும் கற்றேன்.. இப்படி ஓரளவு என்னை நானே வளர்த்துக் கொண்டேன்.

நல்ல கம்பெனி, நல்ல படம் மட்டுமே என் அறிமுகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று காத்திருந்தேன். நண்பர் மூலம் ஜான்மேக்ஸ்  அவர்களை சந்தித்தேன். என்னைப் பார்த்தவுடன் இயக்குனர் ஜீவன், தயாரிப்பாளர்  ஜான்மேக்ஸ் இருவரும், ‘தாடி வளர்த்துக் கொண்டு ஒரு மாதம் கழித்து வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார்கள். அதன்படியே ஒரு மாதம் கழித்து, தாடி வளர்த்த நிலையில் சென்றேன். ஆச்சரியப்பட்ட அவர்கள், ‘நாங்கள் எதிர்பார்த்த கேரக்டருக்கு அப்படியே ஷூட்டா இருக்க..’ என்று சொல்லி என்னை ஹீரோவாக்கினார்கள்.

திண்டுக்கல் பக்கத்தில் சின்னாளப்பட்டி கிராமத்தில் படப்பிடிப்பு. ஒரு வாரம் முன்பேயே போய் அந்த கிராமத்து மக்களுடன் பழகினேன். ஒரு மாதம் வெயிலில் நின்று கருத்துப் போனேன் ‘மொசக்குட்டி’ என்ற கதாபாத்திரத்திற்குள் என்னை நானே நுழைத்துக் கொண்டேன்.

ஜீவன் அருமையான ஒளிப்பதிவாளர்-இயக்குனர் என்பதால் என்னை நல்லவிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ‘மொசக்குட்டி’ எனக்கு நல்ல ஒரு அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கும்ன்னு நம்புகிறேன்..” என்றார் வீரா.




error: Content is protected !!