நடிகர் சங்க அக்கப்போர் துவங்கியது..!

நடிகர் சங்க அக்கப்போர் துவங்கியது..!

நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலுக்கும், நடிகர்கள் சரத்குமார், ராதாரவிக்கும் இடையே ஏற்பட்ட மனத்தாங்கல் பெரும் பகையாக மாறி நாயே, பேயே என்றெல்லாம் பேசும் அளவுக்கு சென்றது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் வரவிருப்பதால் மேலும் பதட்டம் கூடியிருக்கிறது. சரத்குமாரும், ராதாரவியும் மீண்டும் அதே பதவிகளுக்கு நிற்க விரும்புவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இவர்களை எதிர்த்து நடிகர் விஷாலின் தலைமையில் ஒரு டீம் நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சினிமா நடிகர்களைவிட நாடக நடிகர்கள்தான் அதிகம். அவர்களுடைய வாக்கு யாருக்கு அதிகம் கிடைக்கிறதோ அவர்கள்தான் ஜெயிக்க முடியும் என்கிற நிலைமை இப்போது இருக்கிறது.

இதனால் ராதாரவி சென்ற மாத்த்தில் திருச்சி, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு விஜயம் சென்று அங்கேயிருக்கும் நாடக நடிகர்களிடத்தில் வாக்கு சேகரித்துவிட்டு வந்தார்.

இப்போது அதே பாணியில் நடிகர் விஷாலும் அதிகாரப்பூர்வமில்லாத தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளம்பியிருக்கிறார்.

vishal-pudhukottai-1

நேற்று புதுக்கோட்டைக்கு சென்ற விஷால், அங்கேயிருக்கும் முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின் அலுவலகத்திற்குச் சென்று நாடக நடிகர்களைச் சந்தித்து நடிகர் சங்க விவகாரம் பற்றிப் பேசினார்.

தான் யாருக்கும் போட்டியில்லை என்றும், நடிகர் சங்க கட்டிடம் விவகாரம் தொடர்பாகத்தான் மூத்த நடிகர்களுடன் தனக்கு பிணக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இப்போதும் உடனேயே கட்டிடம் கட்டுவதாக அறிவித்துவிட்டால் உடனேயே அவர்கள் காலில் விழுந்து வணங்குவதாகவும் விஷால் பேசியிருந்தார்.

விஷாலின் இந்த பிரச்சாரம் சென்னையில் இருந்த நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு கோபத்தை உண்டாக்க.. விளைவு புதுக்கோட்டை நாடக நடிகர் சங்கத்தினர் அறிக்கை வெளியிடுவதுவரையிலும் சென்றிருக்கிறது.

விஷால் புதுக்கோட்டை வந்தபோது அச்சங்கத்தின் செயலாளர் எம்.பி.சுப்ரமணியன் அங்கே இருந்திருக்கிறார். அவர்தான் விஷாலின் இந்த பிரச்சாரத்திற்கு உதவியிருக்கிறார். இப்போது சென்னை பிரமுகர்களின் உத்தரவுக்கிணங்க செயலாளரின் பெயரை மட்டும்விட்டுவிட்டு மற்றவர்களின் பெயர்களுடன் இணைத்து ஒரு அறிக்கையை அச்சங்கத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில் விஷால் முன் அனுமதியில்லாமல் சங்கத்திற்குள் நுழைந்து பிரச்சாரம் செய்திருப்பதாகவும், இது தவறான செயல் என்றும், இதற்காக அவர் மீது தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

IMG_20150528_0012

IMG_20150528_0013

நடிகர் சங்கத்தின் தேர்தல் நிலவரம் இப்போதே கலவரமாகத் தெரிகிறதே..!




error: Content is protected !!