“சக நடிகர்களை ‘நாய்’ன்னு சொன்னது ரொம்ப அநியாயம்” – நடிகர் சூர்யாவின் வருத்தம்..!

“சக நடிகர்களை ‘நாய்’ன்னு சொன்னது ரொம்ப அநியாயம்” – நடிகர் சூர்யாவின் வருத்தம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின்போது இரு தரப்பினருமே பல முறை கடுமையான வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து கொண்டிருந்தபோது, சரத்குமார் தரப்பினர் எதிர்த் தரப்பினரை ‘நாய்கள்’ என்று திட்டியது நினைவிருக்கலாம்.

இன்றைக்கு வெளிவந்திருக்கும் ‘குமுதம்’ பத்திரிகையில் இது குறித்து பேசியிருக்கும் நடிகர் சூர்யா, “இப்படி பேசியது அநியாயமான பேச்சு..” என்று மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

“நடிகர் சங்க கட்டிடப் பிரச்சினையில் ரொம்ப ஸ்டிராங்கா இருக்கீங்க..? வேகாத வெயில்ல கிரிக்கெட்டெல்லாம் ஆடுறீங்க.. அவ்ளோ இன்வால்வ்மெண்ட்டா..?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது சூர்யா இதனைத் தெரிவித்துள்ளார்.

“நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்குத் தேவையான அந்த 25 கோடியை நான்கைந்து நடிகர்களே சேர்ந்து போட்டாலே பணம் சேர்ந்துவிடும். யாரோ ஒரு நடிகர்கூட முழுப் பணத்தையும் கொடுத்தால்கூட கட்டிடத்தை கட்டிடலாம்.

ஆனால் பல வருடங்கள் கழித்து, ‘இதை எங்க அப்பாதான் கட்டினாரு.’ ‘எங்க தாத்தாதான் கட்டினாரு’ன்னு ஒரு பேச்சு அடிபடும். பிற்காலத்தில் சிலர் வந்து நடிகர் சங்கத்தை சொந்தம் கொண்டாடிக் கூடாது.

நாம யார் பாக்கெட்ல இருந்தும் வலியப் போய் வாங்கல. ‘விருப்பப்பட்டவங்க வாங்க’ன்னு கூப்பிட்டோம். இதன் முக்கிய நோக்கம், எல்லோரும் ஒண்ணா சேர்ந்து செய்யணும். அதுதான்.. ஒரு பொது நலத்திற்காக ப்ரெண்ட்லியான ஒரு சூழ்நிலையை உருவாக்கணும்.

எனக்குத் தெரிந்து கடந்த பத்து வருடங்களாக நடிகர் சங்கத்தில் அந்தச் சூழ்நிலையே இல்லை. சங்கத்து பக்கம் போறதுக்கே தயங்கி தயங்கித்தான் போயிருக்கோம். பல நேரங்கள்ல ‘அவங்களா முடிவெடுத்துவிட்டு கூப்பிடுறாங்களே’ என்பது மாதிரிதான் மனநிலை தோணியிருக்கு.

மூத்த கலைஞர்களை அவங்க மட்டமா பேசினப்ப மனதுக்கு அவ்வளவு வருத்தமா இருந்தது. சக நடிகர்களை அவங்க ‘நாய்’ன்னு சொன்னது ரொம்ப அநியாயமா இருந்தது.

சின்ன வட்டத்தில் பொறுப்பில் இருந்த நான்கைந்து நபர்களால் ஆறாயிரம் பேர் பிரிந்திருந்தோம். அந்த நிலையை இப்போ நாங்க வந்து உடைச்சிருக்கோம்..” என்று பதில் சொல்லியிருக்கிறார் நடிகர் சூர்யா.

நன்றி : குமுதம் வார இதழ்




error: Content is protected !!