“ஒன்றரை வருடங்கள் தாடி வளர்த்து நடித்தேன்…” – ஒரு முகத்திரை ஹீரோ சுரேஷின் அனுபவம்..!

“ஒன்றரை வருடங்கள் தாடி வளர்த்து நடித்தேன்…” – ஒரு முகத்திரை ஹீரோ சுரேஷின் அனுபவம்..!

சமீபத்தில் வெளியான ‘ஒரு முகத்திரை’ படத்தில் ஒரு ஹீரோவாக அறிமுகமானவர் சுரேஷ். மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு இதுதான் முதல் படம்.

மலேசியாவில் பாரம்பரியமிக்க திரைப்படத் தொழிலை செய்து வரும் ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுரேஷுக்கு தமிழ்ச் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்ததில் ஆச்சரியமில்லை. இதனாலேயே சென்னைக்கு படையெடுத்து வந்து தமிழகத்து குடிமகனாகி படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

மலேசியாவில் சுரேஷின் தந்தை பிரபலமான திரைப்பட விநியோகஸ்தர். தமிழ்ப் படங்களை இங்கிருந்து வாங்கி மலேசியாவில் திரையிடும் தொழிலில் பல ஆண்டுகளாக இருந்த்தால் தமிழ்ச் சினிமாவின் போக்கு பற்றி நன்கு தெரியும். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட சில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தான் தமிழ்த் திரையுலகத்திற்குள் கால் பதித்துள்ளதாக கூறுகிறார் சுரேஷ்.

சுரேஷ் மலேசியாவிலேயே தமிழ் நாடகங்களிலும், மலேசியாவிலேயே தயாரிக்கப்பட்ட பல தமிழ் சினிமாக்களிலும் நடித்த அனுபவம் கொண்டவர். தமிழில் இவர் நடித்திருக்கும் முதல் படம் ‘ஒரு முகத்திரை’தான்.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இந்தப் படத்தில் ரகுமான் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் அறிமுக ஹீரோவாக சுரேஷ் நடித்திருந்தார்.

actor suresh

தன்னுடைய அறிமுகம் மற்றும் ‘ஒரு முகத்திரை’ பட அனுபவம் பற்றிப் பற்றி பேசிய நடிகர் சுரேஷ், "எனது அப்பா பல தமிழ்ப் படங்களை மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் விநியோகம் செய்திருக்கிறார். மேலும், மலேசிய தமிழ்ப் படங்கள் பலவற்றையும் தயாரித்திருக்கிறார்.

அப்போது சென்னையில் இருந்து வரும் சினிமா பிரபலங்கள், என்னையும் நடிக்க வருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததார்கள். அப்போதுதான் இந்த ‘ஒரு முகத்திரை’ படத்தின் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தின் தயாரிப்பில் எங்களுக்கு  வேண்டிய சிலர் இருந்தார்கள். அதன் மூலமாகவும், இதன் பின்பு இவர்களுடன் இணைந்த யசோதா பிலிம்ஸ் மூலமாகவும் எனக்கு இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இயக்குநர் செந்தில் நாடன் சார் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. ‘இப்படத்திற்காக தலைமுடியையும், தாடியையும் நீளமாக வளர்க்க வேண்டும்’ என்றார் இயக்குநர். இதற்காக விக் வைக்கலாம் என்றுதான் முதலில் பேசியிருந்தோம். ஆனால் அது அந்த கதாபாத்திரத்தின் மதிப்பைக் குறைந்துவிடும் என்று நினைத்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஒரிஜனலாகவே முடியை வளர்த்து பின்புதான் நடித்தேன். 

அந்த மேக்கப்பில் எனது நடிப்பை பார்த்து பலர், இப்போது பாராட்டியதை நினைக்கும்போது பட்ட கஷ்டமெல்லாம் சாதாரணமாகிவிட்டது. முதலில் சாதாரண படமாக தெரிந்த இந்த ‘ஒரு முகத்திரை’ படம் ரகுமான்  மன நல மருத்துவராக நடிக்க ஆரம்பித்த பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து ஹீரோயினும், ரகுமான் சாரும் தொங்க வேண்டும். ஜன்னல் வழியாக நான் அவர்களை கைப் பிடித்து தூக்க வேண்டும் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

ரகுமான் ஸாருக்கும், ஹீரோயினுக்கும் ரோப் கட்டி தொங்கவிட்டார்கள். ஆனால், எனக்கு ரோப் கட்ட மறந்துவிட்டார்கள். இதனால் காட்சியை எடுக்கும்போது, ஒரு கட்டத்தில் நான் அவர்களுடைய எடையை தாங்க முடியாமல் கீழே விழும் அளவுக்கு சென்றுவிட்டேன், பிறகு எப்படியோ சமாளித்து அந்த காட்சியை முடித்தேன், பிறகுதான் படப்பிடிப்பு குழுவினருக்கே தெரிந்தது எனக்கு ரோப் கட்ட மறந்தோம் என்று..! அந்தக் காட்சி ரொம்ப திரில்லிங்காக இருந்தாலும், பாதுகாப்பு இல்லாமல் இனிமேல் இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்க கூடாது என்று இயக்குநர் எனக்கு அறிவுரை சொன்னார்.

இந்தப் படத்துக்கும் என் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பை கொடுத்த மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. அடுத்து சில படங்களில் நடிக்க இப்போது ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். அவற்றில் முதலாவதாக, ‘ஒரு முகத்திரை’ படத்தின் தயாரிப்பில் ஒரு பங்குதாரராக இருந்த யசோதா பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். அஜீத் நடித்த ‘ஆழ்வார்’ படத்தை இயக்கிய செல்லா இந்தப் படத்தை இயக்குகிறார்…" என்றார் உற்சாகமாக.

புதிய படம் பற்றி கூறிய இயக்குநர் செல்லா, "இது முழுக்க முழுக்க காதல் கதை. சுரேஷுக்கு ஜோடியாக ‘தாயம்’ படத்தில் நாயகியாக நடித்த ‘ஐரா அகர்வால்’ நடிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பினை துவக்கவிருக்கிறோம்.." என்றார்.