full screen background image

“பசியிருக்கும்போது காசில்லை. இ்ப்போ காசிருக்கு. ஆனால் சாப்பிட முடியலை..”

“பசியிருக்கும்போது காசில்லை. இ்ப்போ காசிருக்கு. ஆனால் சாப்பிட முடியலை..”

கவுண்டமணி, வடிவேலு, விவேக்கிற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காமெடி நாயகனும் உருவாகவில்லையே என்ற வருத்தத்தை நீக்கியவர் நகைச்சுவை நடிகர் ‘பரோட்டா’ சூரி.

2009-ம் ஆண்டு வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் ‘பரோட்டா சுப்ரமணி’ என்கிற கேரக்டரில் நடித்து புகழ் பெற்ற சூரி, இதன் பின்பு பல்வேறு படங்களில் பல்வேறு முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முடித்துவிட்டார்.

அவருடைய பரோட்டா காமெடியைவிடவும் மிஞ்சிவிட்டது ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் இடம் பெற்ற ‘புஷ்பா புருஷன் காமெடி’. இப்போதும் சரளமான பேச்சு வழக்கில் ஒரு கிராமத்தானை கண் முன்னே கொண்டு நிறுத்தும் மேனரிஸத்தில் வடிவேலுவை அப்படியே ஞாபகப்படுத்துகிறார் சூரி.

இத்தனையாண்டு கால அனுபவத்திற்கு பிறகு நடிகர் சூரி முதல்முறையாக பத்திரிகையாளர்களை தனியே சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர் பேசும்போது, “1996-ம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன். ஆனால் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டது. ஆகையால் சினிமாவில் அரங்குகள் அமைக்கும்போது பெயின்ட் அடிக்கும் பணிக்குச் சென்றேன்.

actor soori 

அப்போது சென்னையில் நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்கள் போடுவேன். வீரப்பன் கதையை மையமாக வைத்து நாடகம் போட்டதற்கு, அதைப் பார்த்த காவல்துறையினர் 400 ரூபாய் பரிசாக அளித்து பாராட்டினார்கள்.

‘காதல்’, ‘தீபாவளி’ படங்களில் சில காட்சிகளில் நடித்தேன். அஜித் சாருடன் ‘ஜி’ படத்தில் ஒரு காட்சியில் வருவேன். ‘தீபாவளி’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுசீந்திரன் சார் ‘வெண்ணிலா கபடி குழு’ படம் இயக்கியபோது எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.

முதலில் சிறுவேடமாக இருந்ததை, பின்னர் சில காட்சிகள் இணைத்து பெரிய கதாபாத்திரமாக உருவாக்கினார். அப்படத்தில் வரும் புரோட்டா காமெடியால் இந்நிலைமைக்கு வந்துள்ளேன். 

நான் நடித்த படங்களில் என் மனைவிக்கு ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளுக்கு ‘அரண்மனை 2’ படத்தின் காமெடி மிகவும் பிடிக்கும். சமீபத்தில் வந்த புஷ்பா புருஷன் காமெடி, புரோட்ட காமெடியை பின்னுக்கு தள்ளிவிட்டது.

நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடல் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டுமே. மற்றபடி எனக்கு நாயகனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் துளியுமில்லை.

இன்னும் காமெடியனாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. காமெடி வண்டியே நல்லபடியாக ஒடிக் கொண்டிருக்கிறது. 

படப்பிடிப்பு தளத்தில் மட்டுமன்றி டப்பிங், மிக்ஸிங் உள்ளிட்ட பணிகளுக்கு இடையே காமெடியை மெருக்கேற்றுவது என் பாணி. இப்போது சில நண்பர்கள் எனது காமெடி காட்சிகளுக்கு உதவுகிறார்கள்.

என் காமெடிக்கு முன்னோடி என்றால் எங்கப்பாதான். அவரின் காமெடியில் இன்னும் 10 சதவீதத்தைகூட நான் சினிமாவில் செய்யவில்லை. அவர் அப்படியொரு காமெடி மன்னன்.

சினிமாவுக்கு வந்த காலத்தில் பசி கடுமையாக இருக்கும், பணம் இருக்காது. இப்போது ஆண்டவன் புண்ணியத்தில் பணம் இருக்கிறது. ஆனால், இஷ்டப்பட்டதை சாப்பிட முடியவில்லை.

ஏனென்றால் ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன்.

எனக்குக் குடும்ப்ப் பாசம் அதிகம். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். இப்போது என்னுடைய பையன் ஆங்கிலப் பள்ளியில் படித்து பெரிய ஆளாக வர.. என்னுடைய தம்பி மகன்களோ, அண்ணன் மகன்களோ அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து சின்ன ஆளாகிப் போனால் நமக்கு மனசு தாங்காது..

எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான். இப்பவும் வீட்ல எல்லா பிள்ளைகளும் எங்களை அப்பான்னுதான் கூப்பிடும். சூரி அப்பா, கண்ணன் அப்பா என்றுதான் அழைப்பார்கள். இந்த உறவு இப்படியே தொடரணும்னுதான் நான் நினைக்கிறேன். அதனால்தான் நான் சம்பாதிக்கிற பணத்துல 100 ரூபா என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைச்சா 50 ரூபாயாவது அவங்களுக்கும் சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறேன். இப்போ அதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன்..” என்றார் நெகிழ்ச்சியாக..!

Our Score