‘ஜிகர்தண்டா’ தயாரிப்பாளருக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்..!

‘ஜிகர்தண்டா’ தயாரிப்பாளருக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்..!

இன்று மதியம் திடீரென்று எடுத்த அதிரடி முடிவின்படி ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் ஆகஸ்டு 1-ம் தேதி ஒத்தி போடப்பட்டுள்ளது.

இந்த முடிவை எடுக்கும்முன் அப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன், தன்னிடமோ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமோ கலந்தாலோசிக்கவில்லை என்று அப்படத்தின் ஹீரோ சித்தார்த் ட்வீட்டரில் பொரிந்து தள்ளியிருக்கிறார்.

ட்வீட்டிரில் அவர் போட்ட கமெண்ட்டுகளின் தமிழாக்கம் இவை:

“ஜிகர்தண்டா’ ரசிகர்களே.. வெளியில் இருந்து வந்த மோசமான வற்புறுத்தல்களால் எங்களது படத்தின் வெளியீடு தள்ளி போடப்பட்டுள்ளது…”

“கார்த்திக் மற்றும் எங்களது படக் குழு முழுவதும் இந்த ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளன. ஆனால் எங்கள் யாரையும் ஆலோசிக்காமல், படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளது நியாயமற்றது.”

“இது போன்ற மோசமான திட்டங்களினால், எங்கள் படத்தின் வெளியீட்டை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் படம் வெளிவருவதை தடுத்து நிறுத்த முடியாது. ஒரு நல்ல படத்தை யாராலும் வீழ்த்த முடியாது.”

“சினிமா ரசிகர்கள் அனைவரும் எங்கள் படத்திற்கும், எங்கள் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் ஆதரவு தர வேண்டும். நாங்கள் இன்றைக்கு எந்தவிதமான உதவியும் இன்றி நிற்கிறோம். ‘ஜிகர்தண்டா’ எப்போது ரிலீஸ் ஆனாலும், உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை.”

“எந்தெந்த தியேட்டர்களில் ரிலீஸாகிறது என்ற பட்டியலுடன் பேப்பர் விளம்பரங்கள் செவ்வாய்கிழமையன்று வெளியாக ஏற்பாடுகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன..   அதற்குள்ள இந்தச் செய்தியால் மனம் உடைந்துவிட்டது. கடவுள்தான் சினிமாவை காப்பாற்ற வேண்டும்.”

“ஜிகர்தண்டா’வின் தயாரிப்பாளர், தனிப்பட்ட முறையில் இந்த ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு குறித்து மற்ற தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் படத்துடன் சம்பந்தப்பட்ட எங்களுக்கு எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை…”

படத்தின் ஹீரோவின் இதே டென்ஷன்தான் இயக்குநருக்கும்..! என்ன செய்ய..? சமயங்களில் தமிழ்த் திரையுலகத்துக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே..?




error: Content is protected !!