“இசையமைப்பாளர் இமானுக்கு கவிஞர் யுகபாரதி சின்ன வீடு மாதிரி..” – இயக்குநர் பார்த்திபனின் கலகல பேச்சு..!

“இசையமைப்பாளர் இமானுக்கு கவிஞர் யுகபாரதி சின்ன வீடு மாதிரி..” – இயக்குநர் பார்த்திபனின் கலகல பேச்சு..!

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ராதாகிருஷ்ணன் பொதுவாகவே மேடைகளில் பேசும்போது ஹாஸ்யம் கொடி கட்டிப் பறக்கும். நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற அவர் நடித்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்னும் கொஞ்சம் அதிகமான அளவுக்கு பேசித் தீர்த்தார்.

விழாவில் பார்த்திபன் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு தலைக்கு மேலே வேலை நிறைய. ஆமாம்.. இதுல விக் வைச்சு நடிச்சிருக்கேன்.

இந்தக் காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால்கூட அதை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

உதாரணத்துக்கு இதை எடுத்துக் கொள்ளலாம். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், ‘தொடரி திரைப்படத்தில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை?’ என்ற ஓர் விஷயம் ரசிகர்களால் வாட்ஸ் அப்பில் பகிரப்படுகிறது. இந்த அளவுக்கு ரசிகர்களால் சினிமா கூர்மையாக கவனிக்கப்படுகிறது.

சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் ஒருவர் ஒரு புலியிடம் சிக்கியுள்ளார். கடவுளே காப்பாதுன்னு கடவுள்கிட்ட வேண்டினார். அதே நேரம் புலியும் கடவுளிடம் வேண்டியது. நீ ஏன் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டன்னு புலிகிட்ட கேட்டப்போ, இரையை அடிக்கும்போது கடவுள்கிட்ட வேண்டிக்கிறது என்னோட வழக்கம்ன்னு சொல்லுச்சாம்.

அது போலத்தான் சினிமாவை துவங்கும்போது பூஜை போடுறேன். கடவுளை வேண்டிக்கிறோம். இந்தப் படம் நல்லா ஓடணும்னு வேண்டுறோம்.. எல்லாமே நடக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆக மொத்தமே கடவுள் கைலதான் இருக்கு..! ஆனால் இந்த ‘மாவீரன் கிட்டு’ படத்துக்கு அந்த நிலை வராது. ஏன்னா இதுவொரு பெர்பெக்ஷனான படம்.

இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் பெர்பெக்ட்டாக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ‘ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள், Perfection-னுக்கு 8  நாள் ஆகும்..’ என்பார். அதே போல் Perfection-னுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன்.

அந்த வகையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்கணும்ன்னா அதுக்கு நம்ம சுசீந்திரனை அனுப்பினால் போதும். அந்த அளவுக்கு பக்கவா ஸ்கெட்ச் போட்டு பெர்பெக்ஷனோட எல்லாத்தையும் செய்து முடிப்பார்.

இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா மிகச் சிறந்த நடிகை என்றே சொல்லலாம். ஏனென்றால் நான் ஒரு காட்சியில் அழ வேண்டி இருந்தது. அந்தக் காட்சியில் அவர் எனக்கு எதிராக நின்றிருப்பார். ஆனால் கேமிரா என் முகத்தைப் பார்த்திருக்கும். ஸ்ரீதிவ்யாவின் முகம் தெரியாது.

இந்த நேரத்திலும் இயக்குநர் சுசீந்திரன், ஸ்ரீதிவ்யாவை கிளிசரின் போட்டு அழுதபடி நடிக்கச் சொன்னதும், அவர் மறுப்பேதும் கூறமால் அக்காட்சி நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முகம் பிரேமில் வராது என்று தெரிந்தும் என் எதிரில் எனக்காக நடித்தார். இதனால்தான் சொல்கிறேன்.. அவர் ஒரு சிறந்த நடிகை.

நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்படத்துக்கு பின்னர் இந்த விஷ்ணு, மகாவிஷ்ணுவாக மாறிவிடுவார்.

யுகபாரதி பேசும்போது ‘நான் நன்றாக வசனம் பேசியுள்ளேன்’ என்று கூறினார். ஆனால் அந்த வசனம் நன்றாக இருந்ததனால்தான் என்னால் அந்த வசனத்தை நன்றாக கூற முடிந்தது.

இசையமைப்பாளர் இமானின் இதயத்தில் இருந்துதான் இந்தப் படத்தின் இசை பிறந்துள்ளதுன்னு நினைக்கிறேன். அந்த அளவுக்கு இசை அற்புதமாக இருக்கிறது. கவிஞர் யுகபாரதி இமானுக்கு சின்ன வீடு மாதிரி. காரணம் இப்பல்லாம் எல்லாரும் சின்ன வீட்லதான் சந்தோஷமா இருக்காங்க. இந்தக் கூட்டணி மகிழ்ச்சியாக இருக்கிறது. இதேபோல் என்றும் இருக்க வேண்டும்.

‘இனிமேல் உன் உதட்டில் ஸ்காட்ச் விஸ்கி பட்டால் என் முத்தம் கிடைக்காது’ என்றாள் ஒரு மனைவி. 45 வயது மனைவியின் முத்தம் வேண்டுமா? அல்லது 18 ஆண்டு பழமையான ஸ்காட்ச் விஸ்கி வேண்டுமான்னு யோசித்து அந்தக் கணவன் ஒரு நல்ல முடிவையெடுத்தான். அப்படித்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சந்திரசாமி இயக்குநர் சுசீந்திரனை தேர்ந்தெடுத்துள்ளார்…” என்றார்.
error: Content is protected !!