“எனக்கே தடையா..?” பெப்சிக்கு எதிராக பொங்கியெழுந்த நடிகர் மன்சூர் அலிகான்..!

“எனக்கே தடையா..?” பெப்சிக்கு எதிராக பொங்கியெழுந்த நடிகர் மன்சூர் அலிகான்..!

நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கும் திரைப்படங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என பெப்சி நிர்வாகிகள் சிலர் வாய்மொழியாக திரையுலக சங்கங்களுக்கு               அறிவித்துள்ளதாக            செய்திகள்  வெளியாகியுள்ளன. 

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து குமுறித் தீர்த்துள்ளார்.

அப்போது அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“இப்படி ஒருத்தன் வயித்துல ஒருத்தன் அடிக்கலாமா..? நான் உருவாக்கிய ‘டாப்சி’ என்ற புதிய அமைப்பை நசுக்குவதற்காக என்னோட வெற்றியை தடுத்து நிறுத்துவதற்கு நேரடியாக மோத முடியாமல் இந்த மாதிரி நான் படத்துல நடிச்சா நாங்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று பெப்சி அமைப்பினர் சொல்கிறார்கள்.

அப்பா சாமி.. நீ ஒத்துழைப்பு கொடுக்காட்டி ‘டாப்சி’ ஒத்துழைப்பு கொடுக்கும். நீ விலகிக்கோ.. 100 பேர் வேணுமா.. 200 பேர் வேணுமா.. நான் தர்றேன்.. ‘டாப்சி’யில் மொத்தம் 400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் டான்சர்ஸ் இருக்காங்க.. சண்டை கலைஞர்கள் இருக்காங்க.. மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் சேர்ந்துக்கிட்டே இருக்காங்க. ‘மன்சூர் அலிகான் நடிக்க கூடாது’ன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு..? அது தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் செய்ய வேண்டிய வேலை.

எத்தனையோ பிரச்சனைகளை நான் சமாளித்துக் கொண்டுதான் வருகிறேன் ஆனால் இவர்கள் ‘டாப்சி’யை நசுக்க நினைத்து இப்படி செய்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்துல ‘பெப்சி’ தொழிலாளர்கள் உலகத்திலேயே தலை சிறந்த தொழில் நுட்ப  வல்லுனர்கள். ஹாலிவுட்டுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலை அறிந்தவர்கள். இந்த தொழிலாளிகளுடன் எனக்கு எந்தவித மோதலும் கிடையாது.

ஆனால் அந்த அமைப்பில் உள்ள சிலர் உட்கார்ந்துக்கிட்டே சோறு சாப்பிட நினைக்கிறவர்கள்.. நிர்வாகத்துல உள்ள சில பேர் கமிஷன் அடிக்கிறார்கள். கட்டப் பஞ்சாயத்திலும் ஈடுபடுகிறார்கள். அந்த ஒரு சில புள்ளுருவிகளால்தான் இப்போது ‘பெப்சி’ அமைப்புக்கே அவப்பெயர் உண்டாயிருக்கு.

நானே ‘பெப்சி’ உறுப்பினர்தானே…. குரூப் டான்ஸ்ல ஆடியிருக்கேன்.. டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்கிறேன்.. இசைக் கலைஞராக இருந்திருக்கிறேன். நடிகர் சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினர், டப்பிங் ஆர்டிஸ்ட் உறுப்பினர்.. பின்பு நான் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டேன்..? என்னை அவமானப்படுத்தினாங்க. நிச்சயமா ஒரு நாள் அவங்ககிட்டேயிருந்து எனக்கு அழைப்பு வரும். நான் போய் கலந்துக்குவேன்.

எந்த தயாரிப்பாளருக்கும் நான் பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுகிறதே அதிசயம். ஆனா இவங்க சூட்டிங்க கேன்சல் பண்றாங்க. இவங்களுக்கு சூட்டிங்க கேன்சல் பண்ண என்ன உரிமை இருக்கு..? இதுக்குதான்  இப்போ நான் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கிறேன்.

நாட்டில எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. ஆந்திரா சிறையில் தமிழன் வாடுகிறான், இலங்கை சிறையில் தமிழன் வாடுகிறான். அந்தப் பிரச்சனையில இது ஒரு பிரச்சனையான்னு நினைச்சா எனக்கே வெட்கமா இருக்கு.

‘பெப்சி’ தொழிலாளிகளுடன் எனக்கு எந்தவித மாறுபட்ட கருத்து பேதம் கிடையாது. ‘டாப்சி’  ஏழைகளுக்கான, தயாரிப்பாளர்களுக்கான ஒரு இயக்கம். எனக்கு தெரிஞ்ச கலையை கற்று கொடுத்து வெறும் 2000 ரூபாய்ல நடிகர், நடிகை, சண்டை மற்றும் நடன கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன்.

ஐந்து லட்சம் தர இயலாத திரை கலைஞர்கள் ‘டாப்சி’யில் இணைந்து கொள்கிறார்கள். இதில் என்ன தவறு..? மேலும் தொழில் தெரிந்த நான் அவர்களுக்கு பயிற்சி அளித்து உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வதில் என்ன தவறு..? ஒருவருக்கு வேலை தருவது எந்த விதத்தில் தவறாக முடியும்..? நீங்க வேலை செய்யவில்லை என்றால் பரவாயில்லை.. நான் இந்த தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன்.

‘என்னை நடிக்க கூடாது’ன்னு சொல்ல இவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ‘மன்சூர் அலிகான் நடித்தால் நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம்’ என்று தில் இருந்தா, தைரியம் இருந்தா, ஆம்பளையா இருந்த ஒரு கடிதம் மட்டும் எனக்கு தரட்டும். நான் எத்தனை கோடி நஷ்டஈடு வாங்கணுமோ அதை நீதிமன்றத்திற்கு சென்று பெற்றுக் கொள்கிறேன்.

இப்போது நீதிமன்ற உத்தரவின்படி நான் கதாநாயகனாக நடிக்கும் ராஜ் கென்னடி பிலிம்ஸ் வழங்கும் ‘அதிரடி’ படத்திலும் அல்லது ராஜ் கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் வேறு எந்த திரைப்படத்திலும் ‘பெப்சி’ அல்லது அதன் உறுப்பினர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தலையிடக் கூடாது. 

ஆனால், ‘நான் நடிக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது’ன்னு சொல்ல அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. ஷூட்டிங்கிற்கு வந்தால் குடை பிடிக்க சொன்னா குடை பிடிக்கணும். கூட்ட சொன்னா கூட்டனும்.. டீ கொடுக்க சொன்னா டீ கொடுக்கணும்.. அவங்க வேலையை பண்ணிட்டு போகணும். இது தொழிலாளியை அவமானப்படுத்துகின்ற செயல் அல்ல.. அது அவர்களின் வேலை.. கடமை..

மாறாக என்னை யாராவது அவமானப்படுத்தினால் அவங்களை நிக்க வைத்து தோலை உரிப்பேன்.. அதுதான் மன்சூர் அலிகான்…” என்று பொங்கித் தீர்த்திருக்கிறார்.