புதுமையான போலீஸ் கதையில் உருவாகியிருக்கிறது ‘தீரன் அதிகாரம் ஒன்று’..! 

புதுமையான போலீஸ் கதையில் உருவாகியிருக்கிறது ‘தீரன் அதிகாரம் ஒன்று’..! 

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று.’

இந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தின் இயக்குநரான ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வரும் நவம்பர் 17-ம் தேதியன்று வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ஹீரோவான கார்த்தி படம் பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் பேசினார்.

அவர் பேசும்போது, “இந்தப் படம் 1995-2005-வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும். அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம்.

ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரியின் வாழ்க்கைதான் இந்தப் படத்தின் கதைக் கரு. தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ்தான் இந்த படத்தின் கதை.

நம்ம எல்லாருமே போலீசை சூப்பர்மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம்.

நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும்தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம். அது தவறு. நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படித்தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளைவிட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம்தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது.

போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும்தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது.

நான் இந்தப் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்றுதான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அவருடைய குடும்பச் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரி பணி கிடைத்ததும் அதில் சேர்ந்துவிட்டாராம்.

முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம்தான் வரும். பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கவும் முடிந்துள்ளது. இதனாலேயே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுபடுத்தியுள்ளார்.

இந்த ‘தீரனிலும்’ இவர் போன்ற முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும்போது எப்படி ரியாக்ட் செய்வாரோ, அதே அளவுதான் ‘தீரனும்’ இந்த படத்தில் ரியாக்ட் செய்வார்.

‘தீரனில்’ நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும்கூட வரும். இதையெல்லாம் தாண்டித்தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. இதை சொல்லும்போது சாதரணமாக இருக்கும். திரையில் பார்க்கும்போது உங்கள் வியக்க வைக்கும்.

நான் ‘சிறுத்தை’ படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்தபோது சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்கு பிடித்திருந்தது. அதைத்தான் இந்தப் படத்தின் பல காட்சிகளில் நான் கடைப்பிடித்துள்ளேன். இயக்குநருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது.

நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே எனக்கு ‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் செய்த கதாபாத்திரம்தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியேதான் அந்தப் படத்தில் நடித்திருந்தேன்.

தீரன் வீட்டில் இருக்கும்போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும்போது வேறு ஒருவிதமாக இருப்பான்.

மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள பிட்னசையும், நாங்கள் பார்த்த சில போலீஸ் அதிகாரிகளின் குணாதிசயங்கள், உடல் மொழியை இதில் பயன்படுத்தியுள்ளோம்.

இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல்தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்யே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ, அப்படித்தான் என்னுடைய தோற்றமும் இந்த படத்தில் இருக்கும்.

ராஜஸ்தான் மாதிரியான பாலைவனப் பகுதிகளில் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்ணுக்குள் மறைந்துதான் பிடிக்க முடியும். அதனால்தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம் பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல. நிஜம்தான்.

தற்போது நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும்போது எனக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் ஒரு குடும்பமே குழந்தைகளோடு தீக்குளித்து இறந்த அந்த சம்பவத்தை பார்த்தபோது கோபமே வந்தது.

இதைப் போன்ற சம்பவங்களை பார்க்கும்போது, நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோணுகிறது..” என்றார் கார்த்தி.