ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படம்

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ போன்ற படங்கள் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்தியின் நடிப்பில் தனது அடுத்தப் படத்தைத் துவக்குகிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாமல் கார்த்தி நடிக்கும் 19-வது திரைப்படம் என்கிற வகையில் ‘K-19’  என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் நாயகியாக ரஷ்மிகா மண்டன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளதை தொடர்ந்து, கார்த்தி-க்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகவுள்ளார். 

இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், படத் தொகுப்பாளராக ரூபன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்றி வருகிறார். நிர்வாக தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன்.

இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். காதல், காமெடி என ‘ரெமோ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர் இயக்கும் இரண்டாவது படம் இது.

இத்திரைப்படம் எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை ரசிக்கும் விதமாக  உருவாகவுள்ளது.

தற்போது படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு மார்ச் 2-ம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது. 

இதன் படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது.

டிரீம் வாரியர் நிறுவனம் தற்பொழுது, ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் இன்னமும் பெயரிடப்படாத ‘K-18’ படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. 

“திரையரங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும்..” என்று இப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களான S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இருவரும் கூறுகின்றனர். 




error: Content is protected !!