நடிகர் ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

நடிகர் ஜெயம் ரவி-காஜல் அகர்வால் நடிக்கும் புதிய திரைப்படம் துவங்கியது..!

இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படமான ‘டிக் டிக் டிக்’ படத்தில் பாராட்டுக்களையும், ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகவிருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் அடுத்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநரான பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

இந்தப் படம் பற்றி தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் கூறும்போது, “ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் எனக்கு பல ஆண்டுகளாக பழக்கம் உண்டு. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன்.

அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும்.

இயக்குநர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவியைவிட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதைவிட, படத்தை பார்க்கும்போது பார்வையாளர்களே இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை பூஜையுடன் தொடங்கியது.
error: Content is protected !!