“மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..!

“மரகத நாணயத்தின் வெற்றிக்குக் காரணம் அதன் வித்தியாசமான கதைதான்..” – ஹீரோ ஆதியின் பேட்டி..!

கடந்த வெள்ளிகிழமை வெளிவந்த திரைப்படங்களில் ‘மரகத நாணயம்’ திரைப்படம் மட்டுமே ரசிகர்களின் ஆதரவைப் பெற்று கூடுதல் திரையரங்குகளையும் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த வெற்றியை ருசித்த வேளையில் இந்தப் படம் குறித்தும், தனது நடிப்பு கேரியர் குறித்தும் பேசுகிறார் படத்தின் ஹீரோவான ஆதி.

“மரகத நாணயம்’ திரைப்படம் இப்படி வெற்றிகரமாக ஓடுவதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் இயக்குநர் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது.

‘மரகத நாணயம்’ திரைப்படத்தை பொறுத்தவரை கதைதான் ஹீரோ. நடிகர் முனிஸ்காந்த் மற்றும் டேனியல் இருவரும் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரமும், அவர்களுடைய நடிப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது.

actor aadhi

இப்படத்தின் படப்பிடிப்பில் சில காட்சிகளை படமாக்கும்போதே ‘இந்த காட்சி மிகப் பெரிய அளவில் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும்.. இங்கே நிறைய சிரிப்பார்கள்’ என்று இயக்குநர் உறுதியாக கூறினார். அப்போது இயக்குநர் எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறார் என்று யோசித்து இருக்கிறேன்.

அன்றைக்கு இயக்குநர் சொன்னது போலவே திரையரங்கில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்கும்போது அவர்கள் அனைவரும் அக்காட்சிகளை கை தட்டி, சிரித்து ரசித்த உண்மையை நேரில் காண முடிந்தது. எனக்கு இப்படியொரு வெற்றியை பெற்றுக் கொடுத்த படத்தின் இயக்குநருக்கு மிகப் பெரிய நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி வருகிறோம். இப்படம் பற்றிய மற்ற தகவல்களை முறையாக விரைவில் அறிவிப்போம்.

இதை தொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். பிரம்மாண்டமான பீரியட் படமாக உருவாகி வரும் இப்படத்தை ‘1’, ‘நானுக்கு பிரேமதோ’ போன்ற வித்தியாசமான வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ளார். இயக்குநர் சுகுமாருடன் பணியாற்றுவது எனக்கு மிக சிறந்த அனுபவமாக உள்ளது.

அடுத்ததாக நானியுடன் ‘நின்னு கோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். வில்லன் கதாபாத்திரமோ அல்லது இரண்டு நாயகர்களுடன் நடிப்பதிலோ எனக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை. எந்த ஒரு கதையிலும் என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்.

தெலுங்கைவிட நான் தமிழ் படங்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். இதை நான் தெலுங்கு பிரஸ்மீட் ஒன்றில்கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் இங்கு தமிழ் நாட்டில்தான் படித்து வளர்ந்தேன். இங்கே வெளியாகும் அனைத்து படங்களையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து வளர்ந்துள்ளேன். அதனால் எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது…” என்றார் நடிகர் ஆதி.

 




error: Content is protected !!