டொவினோ தாமஸ்-பியா பாஜ்பாய் நடித்திருக்கும் ‘அபியும் அனுவும்’ மே 25-ல் ரிலீஸ்..!

டொவினோ தாமஸ்-பியா பாஜ்பாய் நடித்திருக்கும் ‘அபியும் அனுவும்’ மே 25-ல் ரிலீஸ்..!

ச ரி க ம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள இளம் ஹீரோவான டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். நாயகியாக பியா பாஜ்பாய் நடித்திருக்கிறார். மேலும் பிரபு, சுஹாசினி, ரோகிணி, கலைராணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

வசனம் – சண்முகம், படத் தொகுப்பு – சுனில்ஸ்ரீ நாயர், ஒளிப்பதிவு – அகிலன், இசை – தரண் எழுத்து, இயக்கம் – பி.ஆர்.விஜயலட்சுமி.

இத்திரைப்படம் வரும் மே 25-ம் தேதி வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் பி.ஆர்.விஜயலட்சுமி, “படத்தில் அபி(டொவினோ தாமஸ்) மற்றும் அனு(பியா பாஜ்பாய்) கதாபாத்திரங்கள் முற்றிலுமாக வேறு உலகத்தை சார்ந்தவர்கள்.

அவர்கள் பாதை ஒரு இடத்தில் சந்திக்கும்போது, அவர்களின் புது பயணம் தொடங்குகிறது, அதன் பிறகு நிறைய சவால்களை கடக்க வேண்டி வருகிறது.

கதாபாத்திரங்களை எழுதி முடித்து, அதற்கான வடிவத்தை கொடுக்கும் பொழுதே டொவினோ தாமஸ், பியா பாஜ்பாயை உடனடியாக பொறுத்தி பார்த்தேன். அந்த கதாபாத்திரங்கள் கச்சிதமாக பொருந்துகின்றன. படத்தின் ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் தங்களை பிரதிபலிப்பதை உணர்வார்கள். 

இசையமைப்பாளர் தரண் அவரது முதல் படத்தில் இருந்தே சிறந்த காதல் பாடல்களை தந்து கொண்டிருக்கிறார். அவரது அனைத்து படங்களின் ஆல்பங்களுமே எப்போதும் கேட்கக் கூடிய வகையில் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களிலும் அவரது இசை அறிவு வியக்க வைக்கிறது. தரண் இசை மதன் கார்க்கியின் அற்புதமான பாடல் வரிகளோடு இணையும்போது அது படத்தை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.

படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் எனது வசனகர்த்தா சண்முகம் எழுதிய வசனங்களோடு சேர்ந்த பின்புதான் முழுமையடைந்தனர். அந்த வகையில் சண்முகம், படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவரது வசனங்களால் இன்னும் வலிமையாக்கி கொடுத்திருக்கிறார்…” என்றார்.