ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘ஆத்தா’ திரைப்படம்..!

ஆணவப் படுகொலைகளைப் பற்றிப் பேச வரும் ‘ஆத்தா’ திரைப்படம்..!

ஜீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஆத்தா’.

இந்தப் படத்தில் ஒரு நாய்தான் நாயகனாக நடிக்கிறது. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடித்த ‘கருப்பி’ என்னும் நாய்தான்  அந்த அதிர்ஷ்டசாலி நாய்.

நடிகர் சத்யராஜ், நடிகை சரண்யா இருவரையும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இஸ்மத் பானு, சுரேஷ் லேகா என்ற இரண்டு  புதுமுகங்கள் நாயகிகளாக நடிக்கின்றனர். ஈஸ்வரன் வில்லனாக நடிக்கிறார். மற்றும் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் பிரமுகரான ‘மயிலை’ கணேசன், சண்டை பயிற்சியாளர் அயூப்கான், அப்துல் ரஹீம், மணிவாசகன், மாரிக்கனி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

மேலும் ஜெயசிம்மன், மீரான் முகமது, கிளாடிஸ் எழில் ஆகியோர் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். சிவகாசி செல்லத்துரை, கன்னிசேரி பாண்டியன், விருதுநகர் பால்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பிரியனின் உதவியாளரும்  த்ரிஷா நடித்த ‘கர்ஜனை’ படத்தின் ஒளிப்பதிவாளருமான சிட்டிபாபு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

தேவாவின் உதவியாளர் விஜய் மந்தாரா இசையமைக்கிறார். ‘நான் கடவுள் ‘படத்தில் ‘பிச்சைப் பாத்திரம்’ பாடலை பாடிய மது பாலகிருஷ்ணா, ‘ஊரு சனம் பொல்லாதது ஆத்தா’ என்கிற பாடலைப் பாடியிருக்கிறார்.

DSC_0234

பொதிகை டிவியின் தலைமை படத் தொகுப்பாளரும், திரைப்படக் கல்லூரி மாணவருமான லட்சுமணன், படத் தொகுப்பு செய்கிறார்.

மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் உதவியாளர் மின்னல் முருகானந்தம், சண்டை காட்சிகளை அமைக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஜீன்ஸ் காந்த்.

ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாகவே வாழும் வாழ்க்கைதான்  இந்த ‘ஆத்தா’ படத்தின் கதை. கூடவே, இந்தப் படத்தில் ஒரு கல்லூரி மாணவனின் காதல் வாழ்க்கையையும் இளமைத் துள்ளலோடு சொல்லி இருக்கிறார்கள்.

சாதி என்பது ஒரு மனநோய் என்பதை உணர்த்தி, ஆணவப் படுகொலைகளை ஒழிக்க வேண்டும் என்று திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ் காந்த்.

“ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர… சாதி மதத்தோடு பார்க்க கூடாது. சாதி ஒரு மனிதனின் அடையாளமே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையோ கௌரவமோ கிடையாது” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்களாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி, வீரபாண்டி, கம்பம், கோம்பை, மேகமலை போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது.