“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

“சென்சாரில் லஞ்சம் வாங்குகிறார்கள்..” – தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு

ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை.’

இந்தப் படத்தில் முருகானந்தம், ‘ஜெமினி’ ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – M.P.சிவகுமார், இசை – பால கணேஷ், படத் தொகுப்பு – G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு  – அயனன், தயாரிப்பு – ஜெமினி ராகவா, இணை தயாரிப்பு – க.முருகானந்தம், கதை, தயாரிப்பு – ஜெமினி ராகவா, திரைக்கதை, வசனம், இயக்கம் –  K.S.முத்து மனோகரன்.

இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக் குழுவினர் உள்பட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “ஜெமினி ராகவா ஒரு தயாரிப்பாளராகத்தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..” என்றார்.

IMG_9749

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப் படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் டிரெயிலரும் சிறப்பாக உள்ளது.  இந்தப் படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ஏனென்றால் இப்போது  ‘மீ டூ’ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.

எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத் தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

டிரெயிலர் நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப் படம் என்பதில் சந்தேகமில்லை.

படத்தின் காட்சிகளுக்கிடையில் ஒரு நாய் குறுக்கே ஓடினால்கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் வாங்குறாங்க. போன மாதம்கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் வாங்கினார்கள். அனிமல் வெல்பார் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதைவிட கஷ்டமாக இருக்கிறது.

ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும்.

இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து  படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்…” என்றார்.

இயக்குநர் பிரவீன்காந்த் பேசும்போது, “கவிஞர் வைரமுத்து தமிழ்ச் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாளி. எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞனை இப்படி பண்ணி இருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றுகிறது. அதை மட்டும் முடிந்தால் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள். இது போன்ற சின்னப் படங்கள் நிறைய வர வேண்டும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்…” என்றார்.

IMG_9803

ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “தயாரிப்பாளரான ஜெமினி ராகவா ரொம்பவும் சிறப்பாக நடிச்சிருக்கார். அவர் நல்ல மனிதர். அதனால் இந்தப் படம் நல்லாதான் வந்திருக்கும். இப்படத்தின் நாயகிகள் எல்லாம் ரொம்ப ஜாலியா துணிச்சலாவும் நடிச்சிருக்காங்க.

க்யூப் விசயத்தில் வரவிருந்த ஒரு உதவியை விஷால்தான் தடுத்தார் என்று ராகவா சொன்னார். சின்னப் படங்கள் 100 படங்களுக்கு  தயவு செய்து தியேட்டர்கள் கிடைக்க அரசு உதவ வேண்டும்…” என்றார்.

நடிகர் பாபு கணேஷ் பேசும்போது, “ராகவா ரொம்ப நல்லவர். விசால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற இந்த ராகவாதான் காரணம்.. பெரிய கதாநாயகிகள் எல்லாம் ஒரு விசயத்தை உணர வேண்டும். பெரிய நாயகர்கள் கூடத்தான் நடிப்பேன் என்று அவர்கள் அடம் பிடிக்கக் கூடாது. நல்ல கதை இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

இப்படத்தில் வைரமுத்துவைப் விமர்சித்து இருக்கிறார்கள். அது கதைக்கு தேவை என்பதால்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

மேலும் அண்ணன் கே.ராஜன் சென்சாரில் லஞ்சம் இருக்கிறது என்றார். மோடி ஆட்சியில் லஞ்சமே இல்லை. ஏன் என்றால் எல்லா பணப்பரிவர்த்தனையும் இப்போது ஆன்லைனில்தான்…” என்றார்.

IMG_9806

படத்தின் இயக்குநரான K.S.முத்து மனோகரன் பேசும்போது, “என் வளர்ச்சிக்கு காரணமானவர்களை முதலில் வணங்குகிறேன். தயாரிப்பாளர்கள் முருகானந்தம் மற்றும் ராகவா இல்லை என்றால் இப்படம் இல்லை.

இந்தப் படத்தில் துணிச்சலாக நடித்த ஹீரோயின்களை பாராட்டுகிறேன். சிவகுமாரின் வொர்க் மிக அசாயத்தியமாக இருக்கிறது. இசை அமைப்பாளருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உண்டு. இந்தப் படத்தைப் பற்றி மற்றவர்கள் நிறையப் பேசி விட்டார்கள். இனி நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும். இப்படத்தை வாங்கி வெளியீடும் சுஜித் சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

தயாரிப்பாளர் ஜெமினி ராகவா பேசும்போது, “ரொம்பவும் கஷ்டப்பட்டு இப்படத்தை தயாரித்து இருக்கிறோம். இதைச் சின்ன படம் என்று நினைக்காமல் மக்களிடம் இப்படத்தை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.




error: Content is protected !!