“சமகால சமூகத்தின் பிரதிபலிப்புதான் ‘ஆண் தேவதை’ திரைப்படம்” – இயக்குநர் தாமிரா பேட்டி..! 

“சமகால சமூகத்தின் பிரதிபலிப்புதான் ‘ஆண் தேவதை’ திரைப்படம்” – இயக்குநர் தாமிரா பேட்டி..! 

யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவைகளை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள்.

குறிப்பாக, நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு சிறந்த நடிகராகவும், தேர்ந்த இயக்குநராகவும்  தன்னை நிரூபித்தவர்.

சென்ற ஆண்டு வெளியான ‘அப்பா’ படத்தில் ரசிகர்களின் பாராட்டுக்களோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தார் சமுத்திரக்கனி.  அடுத்து வரும் அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் ‘ஆண் தேவதை’ திரைப்படத்திலும் இதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

விஜய் மில்டன் ஒளிப்பதிவில், ஜிப்ரானின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘ஆண் தேவதை’ படத்தில் ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் ‘காளி’ வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த ‘ஆண் தேவதை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தின் வெற்றி நிச்சயம் என உறுதியாக சொல்கிறார்.

aan devathai-movie-poster-2

பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘ஆண் தேவதை’ படத்தின் இயக்குநரான தாமிரா படம் பற்றி கூறும்போது, “ஆண் தேவதை’ படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. சமகால சமுதாயத்தின் நெருங்கிய ஒரு பிரதிபலிப்பதாகத்தான் இந்த ‘ஆண் தேவதை’யை நான் உருவாக்கியிருக்கிறேன்.

இன்றைய நவீன உலகில் நிலவும் சூழ்நிலை நெருக்கடி பற்றி, குறிப்பாக உலக மயமாக்கல், தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு எவ்வாறு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

ஒரு சினிமாவானது இரண்டு வழிகளில் வெற்றியை அடைகிறது. ஒன்று வெற்றிகரமான ஃபார்முலாவில் பயணித்து எளிதாக வெற்றியை அடைகிறது. இன்னொன்று வழக்கத்துக்கு மாறான சினிமாவாக உருவாகி, முன்னோடியாக மாறுகிறது. ‘ஆண் தேவதை’ அந்த வெற்றியை பெறுவதோடு, தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டர் படமாகவும் அமையும் என்றே நம்புகிறேன்” என்றார்.

மேலும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றி அவர் கூறும்போது, “சமுத்திரக்கனியின் நடிப்பைப் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு மேதை. அவரது கவர்ந்திழுக்கும் திரை ஆளுமையால் நம் கவனத்தை அவர் பக்கம் திருப்பி விடுவார். நாயகி ரம்யா பாண்டியன் அவர் கேரியரின் ஆரம்ப காலக்கட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக துணிச்சலாக நடித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய முயற்சி. படம் வெளியான பிறகு மக்களிடம் இருந்து அதற்காக பாராட்டுக்களை நிச்சயம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்..” என்றார்.