அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ திரைப்படத்தின் பாடல்

அப்துல்  கலாமுக்கு  மரியாதை செலுத்தும் ‘ஆகம்’ திரைப்படத்தின் பாடல்

நமது கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும், அதனை களையும்  வழிமுறைகளையும் சுவாரசியமாக கூறும் படம்தான் ‘ஆகம்’.

ஜாய் ஸ்டார் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில்  கோடீஸ்வரராவ் தயாரிக்கும்  இப்படத்தில் இர்பான் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீக்ஷிதா. குணச்சித்திர நடிகர்  ஜே.பி. உடன் ரியாஸ்கானும் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்  ஊக்கம் தரும் வார்த்தைகளையும், சொற்றொடர்களையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட  பாடல் ஒன்றும் இருக்கிறது.

இந்தப் பாடலை பற்றி இயக்குனர் ஸ்ரீராம் கூறும்போது, “சமீபகாலமாக பல திரைப்படங்களில் கலாம் ஐயாவுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பாடல்கள் பதிவாவதை நான் அறிவேன்.

நாங்கள் உருவாக்கியுள்ள இந்த ‘ஆகம்’ படத்திலும்  அவரைப் பற்றிய பாடல் இருக்க வேண்டும் என்பதை கடந்த  வருடம் எங்களது படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்னரே நாங்கள்  முடிவு எடுத்து விட்டோம்.

அது குறித்து அவரை நேரில் சந்தித்து விவாதிக்கலாம் என்று  எண்ணியபோதுதான் பேரிடியாக அவர் நம்மை விட்டு பிரிந்துப் போன செய்தி வந்தது.

கல்வி குறித்தும், நமது நாட்டின் அறிவு செல்வங்கள் மற்ற நாடுகளுக்கு செல்வம் நாடி போவதால் வரும் மனித வள இழப்பையும் கூறும் கதை என்பதாலும், அவரை குறித்த பாடல் ஒன்று இப்படத்தில் இருத்தல் அவசியம் என்றுக் கருதியதாலும் அந்தப் பாடலை  பதிவு செய்து விட்டோம்.

என் முதல் படத்திலேயே இத்தகைய சவாலான கதையை  தேர்ந்தெடுத்ததற்கும், திறனுடன் செயல்பட்டதற்கும் என்னுடைய குழுவினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.  

வெறும் நுனிப்புல் மேயும் கதை அல்ல  என்பதால், நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது. கல்வி துறையில் பல வருடங்கள் இருந்தபடியால்  கவனமாக கையாள வேண்டியதாகவும் இருந்தது.

இப்போது படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து, இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருக்கிறது..” என்றார்.
error: Content is protected !!