அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ திரைப்படம்..!

அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ திரைப்படம்..!

திரை விமர்சகர்களின் பெரும் பாராட்டுக்களை பெற்ற  ‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார்.

தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார். இந்தப் படத்திற்கு ‘ஆடை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகியாக நடிகை அமலா பால் நடிக்கிறார். V Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

உணர்ச்சிகரமான கதைக் களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் சில படங்களை தவிர்த்துவிட்டு இந்தப் படத்தை ஒப்புக் கொண்டுள்ளாராம்.

படம் பற்றி இயக்குநர் ரத்னகுமார் பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க அதீத உடல் பலமும் மன பலமும் வேண்டும். அமலா பால் இதனை புரிந்து கொண்டு நடிக்க வந்தார்.

போன தலைமுறையை இலவசங்கள் நாசம் செய்தது போல இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள் (மொபைல் டேட்டா)/ அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம்தான் இந்த ‘ஆடை’ திரைப்படம்.

பொதுவாகவே இது மாதிரியான, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட், பெண்கள் முன்னேற்றத்திற்கான  படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த படம் மேற்சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம்..” என்று கூறினார்.

இத்திரைப்படம் பற்றி அமலா பால் பேசும்போது, “இந்த ‘ஆடை’ படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல. ‘ஆடை’ சாதாரண படமும் அல்ல. இது மாதிரியான உணர்ச்சிகரமான கதைகளும், படங்களும் நடிகைகளுக்கு அவர்களின் திறமை மேம்படுத்த ஊக்கம் அளிக்கிறது.

இதில் நான் ஏற்று நடிக்கும் ‘காமினி’ என்ற சிக்கலான கதாபாத்திரம் என்னையும் என்னை சுற்றியுள்ளவர்களதும் ஆதங்கத்தையும் நடுக்கங்களையும் வெளிப்படுத்துவதாகும்.

இயக்குநர் ரத்னகுமரின் ‘மேயாத மான்’ பார்த்த பிறகு அவர் மீதும், அவரது திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்பட்டது. மேலும் அவர் இந்தப் படத்தின் கதை சொன்ன போது அந்த கதையும், கதை சொன்ன விதமும் என்னை பெரிதும்  கவர்ந்தது. கதை என்னை மிகவும் பாதித்திருக்கிறது. அவ்வளவு உணர்ச்சிகரமான கதை…”  என்றார் அமலா பால்.

தற்போது இந்தப் படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது.