மொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..!

மொபைலில் படம் பார்க்க உதவிக்கு வருகிறது A Cube Mobile Application..!

நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்குபவர். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கலக்குபவர். இவர் படங்கள் தமிழ் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ‘அடங்காத காளை’ என்னும் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து,  இயக்கி வருகிறார்.

நடிகர் சாம்ஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக ஆர்த்தி சுரேஷ், கவிதா, குஷி ஆகியோர் நடித்துள்ளார்கள். அப்பா வேடத்திற்கு  ஜோடியாக தொலைக்காட்சி நடிகை தேவி கிருபா நடித்திருக்கிறார். U.K.முரளி இசையமைத்துள்ளார். சக்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருகிறது.

தெலுங்கில் இப்படம்  ‘அந்தால ராக்சஷடு’ எனும் தலைப்பில் வருகிறது. இதன் படப்பிடிப்பு 50 சதவீதம், சென்னையிலும் 50 சதவீதம் ஹைதராபாத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இந்தப் படத்தைக் குறைந்த செலவில் தங்களது மொபைலிலேயே பார்ப்பதற்காக ‘A Cube’ எனும்  புதிய மொபைல் அப்ளிகேஷன் ஒன்றையும் நாயகன் ஜெய் ஆகாஷ் வடிவமைத்துள்ளார்.

இது குறித்து ஜெய் ஆகாஷ் பேசும்போது, “இந்தப் படத்தை வெளியிட ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளோம். இந்த அப்ளிகேஷன் ரசிகர்கள் படம் பார்க்க மிகச் சிறந்த,  எளிய வழியாக இருக்கும். வருகிற 18-ம் தேதி எனது பிறந்த நாளன்று இந்த ‘A Cube அப்ளிகேஷனை’ வெளியிடுகிறோம்.

இந்த அப்ளிகேஷனை அனைவரும் தங்கள் மொபைலில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் வாரா வாரம் ஒரு படத்தை வெளியிடவுள்ளோம். முதல் படமாக எனது ‘அடங்காத காளை’ படம் வெளியாகிறது.

இந்த அப்ளிகேஷனின் சிறப்பு என்னவெனில்  ஒரு படத்தை  நீங்கள் தியேட்டரில் பார்க்க முடியாவிட்டால் 50 ரூபாய் கட்டி இந்த அப்ளிகேஷனில் இரண்டு நாட்கள்வரை  பார்த்து கொள்ளலாம். நீங்கள் பார்த்த பிறகு அந்த இரண்டு நாட்களில் வேறு எவர் வேண்டுமானாலும் தொடர்ந்து பார்க்கலாம். இதுபோல் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒரு படத்தை இந்த அப்ளிகேஷன் மூலமாக வெளியிட இருக்கிறோம்.  

எனது அடுத்த படமான ‘புதிய மனிதன்’ தெலுங்கில் ‘கொத்தகா உன்னாடு’ என்று வெளியாகவிருக்கிறது. இந்தப் படமும்  இதே அப்ளிகேஷனில் அடுத்து  வெளியாகவுள்ளது. வேறு  பல தயாரிப்பாளர்களும் தங்களது படத்தை இந்த ‘A Cube அப்ளிகேஷனில்’ வெளியிட விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களது படமும் ‘A Cube அப்ளிகேஷனில்’ வெளியாகவுள்ளது.

நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டருக்கு போனால் அதன் செலவு தற்காலத்தில் 1000 ரூபாய்க்கும் மேல் ஆகிவிடும். ஆனால் இந்த ‘A Cube அப்ளிகேஷனில்’ நீங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் குடும்பம் மொத்தமும்  பார்க்க முடியும். அனைவரும் மிக எளிதான வழியில் படம் பார்க்க ஒரு மிகச் சிறந்த பிளாட்பார்மாக இந்த ‘A Cube அப்ளிகேஷன்’ இருக்கும்…” என்றார்.