வரிச்சலுகையில் கூடுதலாக வசூலித்ததை திருப்பிச் செலுத்துங்கள் – தியேட்டர்காரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

வரிச்சலுகையில் கூடுதலாக வசூலித்ததை திருப்பிச் செலுத்துங்கள் – தியேட்டர்காரர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கேளிக்கை வரிச் சலுகை பெற்ற திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை தமிழக அரசிடம் தியேட்டர் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் சில விதிமுறைகளுக்குட்பட்டு திரைப்படங்களுக்கு வரிவிலக்கும் அளித்து வருகிறது. இந்த வரிவிலக்கு பெற்ற திரைப்படங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வணிக வரியை முழுமையாகச் செலுத்த வேண்டியதில்லை. அதே சமயம் தியேட்டர் கட்டணங்கள் வரிவிலக்கிற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் இதுவரையிலும் இந்த வரிவிலக்கு சலுகையை அனுபவித்த தயாரிப்பாளர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தியேட்டர் கட்டணத்தை குறைக்க முன் வரவில்லை. இதனால் இந்த கேளிக்கை வரி விலக்கினால் கிடைத்த பலன் ரசிகர்களுக்கு போய்ச் சேரவில்லை.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வக்கீல் கே.ஜே.சரவணன் என்பவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அவர் தன்னுடைய மனுவில், ‘சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி ‘கயல்’ என்ற திரைப்படத்தை பார்க்க குடும்பத்தினருடன் சென்றேன்.

இந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிச் சலுகை வழங்கியுள்ளதால், கேளிக்கை வரியை எங்களிடம் வசூலிக்கக் கூடாது. ஆனால், தியேட்டர் உரிமையாளர் கேளிக்கை வரியுடன் சேர்த்து எங்களிடம் வசூலித்துள்ளார். எனவே, எங்களிடம் கூடுதலாக வசூலித்த 107 ரூபாயை, 9 சதவீத வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட வேண்டும். வரிச் சலுகை வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு தொடர்ந்து விசாரணையில் இருந்தது. நேற்று இதன் இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தமிழ் மொழி மற்றும் கலாசார வளர்ச்சிக்காகத்தான் திரைப்படங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரிச் சலுகை பெறும் திரைப்படங்களில், பிறமொழி வார்த்தைகள், வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் குறைவாக இருக்க வேண்டும். திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களை மனதில் வைத்தே, இது போன்ற வரிச் சலுகைகள் தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகின்றன.

திரைப்படங்களை மக்களுக்கு திரையிட்டு காட்டுவதுதான் தியேட்டர் உரிமையாளர்களின் கடமையாகும். அந்த கடமையோடு, வரி விலக்கு சலுகை விதிமுறைகளையும் அவர்கள் அமல்படுத்தவேண்டும்.

வரிச் சலுகை என்பது உரிமை இல்லை. அது ஒரு மானியம்தான். தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்படி, இதுபோன்ற சலுகைகளையும், விதிமுறைகளையும் அரசு பிறப்பிக்க முடியும். எனவே, ‘கேளிக்கை வரிச் சலுகை என்பது திரைப்பட துறைக்கும், தியேட்டர் உரிமையாளர்களின் நலனுக்காக மட்டுமே தவிர, அது ரசிகர்களுக்கு கிடையாது’ என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.

‘ஒருவரிடம் அதிக வரி வசூலிக்கப்பட்டால், அது திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்’ என்று சட்டம் கூறுகிறது. எனவே, கூடுதலாக வசூலிக்கப்பட்ட 107 ரூபாயை மனுதாரரிடம் தியேட்டர் நிர்வாகம் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

இதேபோல, பிறரிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகையை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாது. எனவே, வரிச் சலுகைகளைப் பெற்று இதுவரையிலும் சம்பாதித்த கூடுதலாக வசூலித்த தொகையை தமிழக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் ஒப்படைக்க வேண்டும். 

வரிச் சலுகை தொடர்பாக வணிக வரித்துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளில், வரி சலுகை விவரங்கள், டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அச்சிட்டு, அதை கேளிக்கை வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஆனால், அரசு வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கை சட்டத்தின் அடிப்படையில் தவறானது இல்லை. ஆனால், அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தெளிவாக இல்லாமல் உள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதேநேரம், இந்த வரிச்சலுகை ரசிகர்களுக்குத்தான் சென்றடைய வேண்டும். எனவே, கேளிக்கை வரிச் சலுகை திரைப்படங்களை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சென்றடையும் விதமாக தகுந்த புதிய உத்தரவை 4 வாரங்களுக்குள் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை செயலாளர், ஆணையர் ஆகியோர் பிறப்பிக்க வேண்டும்.

கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்...” என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு இதனை அப்படியே ஏற்றுக் கொள்ளுமா அல்லது மேல் முறையீட்டுக்கு போகுமா என்று தெரியவில்லை..