“96 படத்தின் கதை திருடப்பட்டதா…?” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..!

“96 படத்தின் கதை திருடப்பட்டதா…?” – இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்..!

“96 படத்தின் கதை என்னுடையது. எனது அனுமதியில்லாமல், எனக்குத் தெரியாமல் இயக்குநர் மருதுபாண்டியன் துணையுடன் இயக்குநர் பிரேம்குமார் அதனை படமாக்கிவிட்டார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன்பாக ஊடகங்களின் மூலம் குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பான செய்தி இந்த இணைப்பில் இருக்கிறது.

இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணீதரன், மருது பாண்டியன், உதவி இயக்குநர் மணி வில்லன் மற்றும் இயக்குநர் பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1

இதில் இயக்குநர் பிரேம்குமார் பேசுகையில், “இந்தக் கதை என்னுடையதுதான். இந்தக் கதையை நான் 2016-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ‘96’ என்ற பெயரில் ‘தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க’த்தில் பதிவு செய்திருக்கிறேன்.

இந்தக் கதையை முழுமையாக எழுதி முடித்த பின்னர் முதலில் இயக்குநர் பாலாஜி தரணீதரனிடமும், நடிகர் விஜய் சேதுபதியிடமும் சொன்னேன். அதற்கு பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலிடமும் சொன்னேன். அவரும் ‘எனக்குக் கதை பிடித்திருக்கிறது’ என்று சொல்லிய பிறகுதான், அந்த கதைக்கான விவாதத்தைத் தொடங்கினேன்.

இந்தப் படத்தின் கதை விவாதத்தில் இயக்குநர்கள் மருது பாண்டியன், பாலாஜி தரணீதரன் ஆகியோர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது பேசப்பட்ட விசயங்களையும் நான் தனியாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்த படத்தின் டைட்டில் ‘96’ என்று வைத்து டிசைன் செய்து பல முறை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகும்வரை நிறைய முறை விளம்பரப்படுத்தப்பட்டது. அப்போதெல்லாம் இதைப் பற்றிய புகார் ஏதும் வரவில்லை.

10

படம் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்து விச்சு என்பவர் சமூக வலைத்தளம் ஒன்றில், ‘இந்த கதை என்னுடையது’ என்று பதிவிட்டிருந்தார். அதனையடுத்து சுரேஷ் என்பவர் ‘இந்தக் கதை என்னுடையது’ என்றும், ‘இயக்குநர் மருது பாண்டியன் என்பவரிடம் இந்த கதையை சொல்லியிருக்கிறேன்’ என்றும், ‘அவர்தான் இந்த கதையை இயக்குநர் பிரேம்குமாரிடம் சொல்லி முடிவாக அது படமாகியிருக்கிறது’ என்றும் குற்றம் சுமத்தியிருக்கிறார். ஒரே கதையை எப்படி இரண்டு பேரிடமிருந்து திருட முடியும்..?

‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ மற்றும் ‘அசுரவதம்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் மருது பாண்டியன் மீது, பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் முன் வைத்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் உறுதியாக கூறுகிறேன்.

இந்தக் கதையை முதல் முறையாக என்னுடைய குறிப்பேட்டிலும், இரண்டாவது முறையாக என்னுடைய கைப்பட எழுதி பைண்டிங் செய்யப்பட்ட ஃபைலும் இப்போதும் என்னிடம் உள்ளன. இதன் பின்னர்தான் இந்த கதையைப் பற்றி அவரிடம் கூறினேன்.

இந்தக் கதையைக் கேட்டவுடன் மருது பாண்டியன், ஏற்கனவே சுரேஷ் என்பவர் இதே பாணியில் ‘92’ என்ற டைட்டிலில் கதையை சொன்னதாக என்னிடம் சொல்லவேயில்லை. கதை விவாதத்தின்போது மருது பாண்டியனும் உடனிருந்தார். அப்போதும் அவர் சொல்லவில்லை. அவர் கதையை திருடியிருந்தால், அந்தக் கதையை மருது பாண்டியனே இயக்கியிருக்கலாமே..? ஏன் என்னிடம் சொல்லி அதனை இயக்கச் சொல்ல வேண்டும்…?

இந்தப் படத்தில் கதையின் நாயகியின் பெயர் ஜானகி என்பதும், கதைக் களம் தஞ்சாவூர் என்பதும், பள்ளிப் பருவத்து காதலைத்தான் இதிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதும் பொருந்தி வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய குற்றச்சாட்டு அல்ல.

கதையைத் திருடியவர் கதையின் நாயகியின் பெயரை மாற்றியிருக்கலாமே..? கதைக் களத்தின் இடத்தையும் மாற்றியிருக்கலாமே..? இப்படி எத்தனையோ வாய்ப்புகள் இருக்கும்போது, காப்பியடிக்கும் படத்தில் அப்படியேவா பயன்படுத்துவார்கள்..?

11

இது போன்ற பிரச்சினைகளை பேசி தீர்க்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் இருக்கிறது. இயக்குநர் கே பாக்யராஜ் இப்போது அந்தச் சங்கத்திற்குத் தலைவராக இருக்கிறார். அங்கு வைத்து பேசியிருக்கலாம் அல்லது நீதிமன்றம் இருக்கிறது. அங்கு சென்று முறையாக போதிய ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.

இதையெல்லாம் விடுத்து மாற்று பாதையை தேர்ந்தெடுத்து, ஊடகங்கள் வாயிலாக என்னை போன்ற படைப்பாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாமா…? 

இது தொடர்பாக சுரேஷ் 2012-ம் ஆண்டில் யாருக்கோ மின்னஞ்சல் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார். தொழில் நுட்பக் குழுவினரின் உதவியுடன் அந்த ஆதாரங்களை அவர் வெளியிட முன் வர வேண்டும் என்று இப்போது கேட்டுக் கொள்கிறேன். 

கதைத் திருட்டு தொடர்பாக ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சுமத்தும்போது, தங்களுடைய கதை இதுதான் என்ற ஆதாரத்தை வெளியிடவேண்டும். ஆனால் அப்படியொரு ஆதாரத்தை சுரேஷ்  இதுவரையிலும் முன் வைக்கவில்லை.

இவர்கள் யாரும் ‘96’ கதை தொடர்பான நம்பகத்தன்மைக் கொண்ட எந்த ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இதிலிருநது அவர்களின் நோக்கம் என்னவென்று தெளிவாக தெரிய வருகிறது…” என்றார் இயக்குநர் பிரேம்குமார்.

நிகழ்வில் கலந்து கொண்ட உதவி இயக்குநர் மணி வில்லன் பேசுகையில், “சுரேஷ் என்பவர் மருது பாண்டியன் அவர்களிடம் ‘92’ என்ற கதையைச் சொல்லும்போது நானும் உடனிருந்தேன்.

அவர் கூறிய கதையில் ஸ்கூல் போர்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தன, அந்தக் காட்சிகளெல்லாம் ‘96’ படத்தில் இல்லை. அவருடைய கதையும், இவருடைய கதையும் வேறு, வேறு. அவருடைய கதையின் நாயகன் வேறு, இந்த கதையின் நாயகன் வேறு…” என்றார்.

இதற்கு இயக்குநர் சுரேஷின் பதில் என்ன என்பது தெரியவில்லை..! ஆனால், இயக்குநர்கள் சங்கத்திற்கும், எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் இடையில் ஒரு பஞ்சாயத்து, வரும் நாட்களில் நடக்கவிருக்கிறது என்பது மட்டும் உறுதி..!