’96’ படத்தின் கதை மீது சொந்தம் கொண்டாடும் இன்னுமொரு இயக்குநர் விஸ்வநாத்..!

’96’ படத்தின் கதை மீது சொந்தம் கொண்டாடும் இன்னுமொரு இயக்குநர் விஸ்வநாத்..!

சென்ற மாதம் வெளியாகி அதிரிபுதிரி ஹிட்டடித்திருக்கும் ‘96’ திரைப்படம் வெளியான மூன்றாவது நாளே “அத்திரைப்படத்தின் கதைக் கரு தன்னுடையது…” என்று சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றிய விச்சு என்னும் விஸ்வநாதன் முகநூலில் பதிவிட்டிருந்தார்.

இவர் பற்றி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநர் பிரேம்குமாரும் குறிப்பிட்டிருந்தார். பாரதிராஜாவின் உதவியாளரான சுரேஷ் ஏற்கெனவே ‘96’ படத்தில் தான் எழுதிய ஸ்கிரிப்ட்டின் 90 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லி வந்த நிலையில் முதன்முதலில் இந்தப் படத்தின் கதைக் கரு தன்னுடையது என்று தெரிவித்த விச்சு என்ற விஸ்வநாத்தின் கருத்தையறிய அவரைத் தொடர்பு கொண்டோம்.

அவர் இது குறித்து பேசும்போது, “ஸார், நான் ஒரு பாரம்பரியமான சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவன். மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவன். சினிமாதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

இதற்கு முன்பு ‘வாமனன்’, மற்றும் ‘யாகவராயினும் நா காக்க’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன்.

இந்த ‘96’ படத்தின் கதைக் கருவான பள்ளியில் படிக்கும்போது காதலித்த இருவர், 15 ஆண்டுகள் கழித்து மீண்டு்ம் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பின்போது அவர்களுக்கிடையேயான காதல் இப்போதும் அப்படியே இருக்கிறது என்பதாக எனது கதையை எழுதியிருந்தேன். இந்தக் கதையை நான் 2011-ம் ஆண்டே எழுதி வைத்திருக்கிறேன்.

vishwanath-2

இந்தக் கதையை 2011-ம் ஆண்டே இப்போது ‘96’ படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களிடத்தில் தெரிவித்தேன். அவரும் கதையைக் கேட்டுவிட்டு “நல்லாயிருக்கு. ஆனால் இப்போது இது மாதிரி  மென்மையான கதைகளை நான் செய்ய முடியாது. வேற கதை சொல்லுங்கள்…” என்றார். உடனேயே வேறு இரண்டு கதைகளை அவரிடத்தில் சொன்னேன். ஆனால் அவரால் எனக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை.

அதோடு 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் தயாரிப்பாளர் நந்தகோபால் மீண்டும் திரைப்படங்களைத் தயாரிக்கும்போதும் நான் அவரிடத்தில் சென்று வேறு சில கதைகளைச் சொன்னேன். அப்போதும் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

2016-க்கு பிறகு நான் அப்படியே தெலுங்கு படவுலகத்துக்குப் போய்விட்டேன். அங்கே பல நாயகர்களிடம் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன். குறிப்பாக மஞ்சு மனோஜிடம் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன். அவர் கதையைக் கேட்டு உருகியவர், “நிச்சயம் நாம செய்வோம்..” என்று சொன்னார். ஆனால், வேறு சில காரணங்களினால் அவரால் எனக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை.

இந்த நேரத்தில்தான் இந்த ‘96’ படம் பற்றி அனைவரும் சொல்லவே.. படத்தைப் பார்த்தேன். நான் எழுதி, பொத்தி, பொத்தி வைத்திருந்த கதைக் கருவை போலவும், சில முக்கியமான காட்சிகளும் இதில் இருந்ததால் மனதளவில் நொறுங்கிப் போனேன்.

தமிழில் இல்லையென்றாலும் தெலுங்கிலாவது இந்தப் படத்தை வைத்து திரையுலகில் கால் வைத்துவிடலாம் என்று நினைத்திருந்தேன். அதனால்தான் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் முகநூலில் அன்றைக்கு அப்படி எழுதினேன்.

‘96’ படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு போன் செய்து இது பற்றி பேசினேன். அப்போது அவர் “2011-ல் நீங்கள் இது போன்ற கதையை என்னிடம் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லை…” என்றார். அதனால் நானும் அதற்குமேல் அவரை வற்புறுத்தவில்லை.

இயக்குநர் பிரேம்குமாரை நான் பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை. அவரிடத்தில் என்னுடைய கதை சென்றிருக்க வாய்ப்பும் இல்லை. நான் பிரேம்குமாரிடம் கிரெடிட் கேட்கவோ அல்லது நியாயம் கேட்கவோ, பணம் கேட்கவோ அதை எழுதவில்லை. என் மனதில் இருந்த சஞ்சலத்தை வெளிப்படுத்த நினைத்தேன். அவ்வளவுதான்..!

ஏனெனில் இப்போதும் நான் எழுதிய ஸ்கிரிப்ட் என்னிடத்தில் அப்படியேதான் உள்ளது. வரும்காலத்தில் யாராவது ஒரு தயாரிப்பாளர் முன் வரும் பட்சத்தில் என்னிடமிருக்கும் கதையை அப்படியே படமாக்குவேன்..” என்று சொல்லி முடித்தார்.

“இப்போது சுரேஷ் என்பவரும் இதேபோல் ‘96’ படத்தின் கதை, திரைக்கதையை தன்னுடையது என்கிறாரே..?” என்று கேட்டபோது, “சுரேஷின் பேட்டியை நானும் கேட்டேன் ஸார். பாவமாக இருக்கிறது. அவருடைய உறுதியான குரலைக் கேட்கும்போது அவரும் இதே கதைக் கருவில் கதையை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பது எனக்கும் புரிந்தது. இதில் ஒன்றும் தவறில்லையே.. இது அவரவர் சுதந்திரம். யார் முதலில் படமாக்குகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியம்.

நான் இயக்குநர் சங்கம், எழுத்தாளர் சங்கம் இரண்டிலுமே உறுப்பினராக இல்லை. ஆக, இந்தக் கதையின் மீது சினிமாவுலக சங்கங்கள் மூலமாக நான் எந்தவிதத்திலும் உரிமை கோர முடியாது. ஆனால் சுரேஷுக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார் விஸ்வநாத்.

விஸ்வநாத்தின் இந்த உரிமை கோரல் பற்றி ’96’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலிடம் நாம் கேட்டபோது, “விஸ்வநாத்தை எனக்குத் தெரியும் ஸார். இல்லைன்னு சொல்லவில்லை. ஆனால் இந்தக் கதையை, இது மாதிரியான கதையை அவர் என்னிடம் சொன்னதாக எனக்கு ஞாபகமே இல்லை. இந்தக் கதையை முதன்முதலாக என்னிடத்தில் இயக்குநர் பிரேம்குமார்தான் வந்து சொன்னார்..” என்று முடித்துக் கொண்டார்.

இதேபோல் ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமாரிடம் விஸ்வநாதனின் பதிவு பற்றிக் கேட்டபோது, “இந்தக் கதை முழுக்க, முழுக்க என்னுடைய சொந்தக் கதை. நானேதான் எழுதினேன். தயாரிப்பாளர் நந்தகோபால் ஸாரிடம் நான்தான் இந்தக் கதையைப் சொல்லி ஓகே வாங்கினேன்.. மற்றவர்கள் சொல்வது பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது ஸார்..” என்றார் தன்மையுடன்..!

ஒரு படம்.. ஒரு கதை.. மூன்று கதாசிரியர்கள்.. மூன்று திரைக்கதையாசிரியர்கள்.. மூன்று இயக்குநர்கள் என்று முக்கோணத்தில் பறக்கிறது ‘96’ படத்தின் கதை சர்ச்சை..!

வரும் காலத்தில் இது போன்ற குற்றச்சாட்டுக்கள் அதிகம் எழும் வாய்ப்புண்டு என்பதால் இதற்கு கடிவாளம் போடுவதை போல ஏதாவது சட்டத்திட்டங்களை திரையுலக சங்கங்கள் கொண்டு வருவது நல்லது என்றே நினைக்கிறோம்..!