பைக் ரேஸின் கொடூரத்தை சொல்லும் ’46’ திரைப்படம்..!

பைக் ரேஸின் கொடூரத்தை சொல்லும் ’46’ திரைப்படம்..!

விஜய் நடித்த ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ மற்றும் ‘புலி’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் TR.பாலா. மேலும் 25-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர் தற்போது ’46’ என்கிற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்..

இந்தப் படத்தில் ‘காத்திருப்போர் பட்டியல்’ படத்தில் நடித்த சச்சின் மணி மற்றும் ‘பீச்சாங்கை’ படத்தின் ஹீரோவான கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

புதுமுகங்களான  மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயாகிகளாக நடிக்க… முக்கிய வேடங்களில் ‘கலக்கப் போவது யாரு’ புகழ் குரேஷி மற்றும் கியான் ஆகியோர் நடிகின்றனர்.. தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் ‘சண்டக்கோழி-2’வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

#46 (4)

வினோத்ராஜன் ஒளிப்பதிவை கவனிக்க, மணிக்குமரன் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். இவர் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் படத் தொகுப்பாளர் ஆவார். கலை – ராமு தங்கராஜ், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்,  நடனம் – சாண்டி-அசார். 

சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் சட்ட விரோதமான பைக் ரேஸ் பற்றிய கதைதான் இந்தப் படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப் பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இது பற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என மிகவும் விரிவாக ஆராய்ச்சி செய்து, அந்த உண்மையை திரைக்கதையாக்கி.. அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாகவும் இதை உருவாக்கி வருகிறார்கள்.

#46 (7)

இந்த இல்லீகல் பைக் ரேஸினால் என்ன பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறியாமல் பணம் மற்றும் ஆர்வம் காரணமாகவே இந்த பைக் ரேஸில் பலரும் கலந்து கொள்கிறார்கள்.. இவர்களின் தவறுகளையும் இந்த திறமையை சிலர் தங்களது சுய லாபத்துக்காக  எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இதில் சுட்டிக் காட்டியுள்ளார்களாம். அந்த வகையில் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான படம் என்றே சொல்லலாம்.

இதுவரை இப்படி தெருக்களில் நடக்கும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றி இந்தியாவில் எந்த மொழியிலும் படம் வெளியாகவில்லை.  யாரும் தொடாத கான்செப்ட் என்பதால்தான் இயக்குநர் TR.பாலா இந்த கதையை படமாக்க முடிவு செய்தாராம்.

படம் பற்றி இயக்குநர் டி.ஆர்.பாலா பேசுகையில், “சென்னையில் நிறைய பைக் மற்றும் ஆட்டோக்களில் 46 என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம் . இவர்களெல்லாம் இந்த ஸ்ட்ரீட் ரேஸ் விரும்பிகள்தான். வேலன்சியோ ரோஸ்ஸி என்கிற பைக் ரேஸ் ஜாம்பவானின் பைக் எண்தான் 46. அதைப் பற்றிய படம் என்பதாலேயே படத்திற்கும் ’46’ என்றே டைட்டில் வைத்துவிட்டோம்.

#46 (5)

இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசன்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம். 

இதற்காக ஹைதராபாத்தில் இருந்து ஹைடெக்கான தொழில் நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம். குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிக தரூபமாக எடுத்துள்ளோம்.

விஜய் சார் படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் அவரிடமிருந்து பங்க்சுவாலிட்டியை எப்படி கடைபிடிக்கணும், ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி எப்படி படம் இருக்கணும் என சில டிப்ஸ்களை கற்றுக் கொண்டது இந்தப் படத்திற்கு ரொம்பவே உதவியாக இருந்தது. அவர்தான் எனக்கு ரோல் மாடல்…” என்கிறார் TR.பாலா.




error: Content is protected !!