2.0 – சினிமா விமர்சனம்

2.0 – சினிமா விமர்சனம்

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.

படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌‌ஷய் குமார், கலாபவன் சஜோன், மயில்சாமி, ஐசரி கணேஷ், அசுதோஷ் சின்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – நீரவ்ஷா, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், படத் தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – முத்துராஜ், ஒலி வடிவமைப்பு – ரசூல் பூக்குட்டி, வசனம் – ஜெயமோகன், ஷங்கர், கூடுதல் வசனம் – மதன் கார்க்கி, தயாரிப்பு – சுபாஷ்கரன், எழுத்து, இயக்கம் – எஸ்.ஷங்கர்.

2010-ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ படத்தின் 2-ம் பாகமாக இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. முதல் பாகத்தைத் தயாரித்த ‘சன் தொலைக்காட்சி’ நிறுவனம், ‘எந்திரன்’ என்கிற பெயரை பயன்படுத்த அனுமதி அளிக்காததால் ‘2.0’ என்கிற பெயரில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘எந்திரன்’ படத்தின் முடிவில் விஞ்ஞானி வசீகரனின் கையை மீறிப் போய் செயல்பட்ட சிட்டி ரோபோவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு அவருடைய மதர் போர்டு தனியே எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. சிட்டியும் தனித்தனியே பிரிக்கப்பட்ட நிலையில் மியூஸியத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்.

வசீகரன் இன்னமும் தனது ஆராய்ச்சியை தொடர்ந்த நிலையில் உள்ளார். இப்போது புதிதாக பெண்ணாகவே தென்படும் அளவுக்கு ஒரு அழகான ரோபோட்டை வடிவமைத்து உருவாக்கியுள்ளார். அந்தப் பெண் ரோபோட் படத்தின் நாயகியான எமி ஜாக்சன்.

இந்த நேரத்தில் சென்னையில் திடீரென்று ஒரு நாள் செல்போன்கள் அதனுடைய பயனாளர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு விண்ணை நோக்கிப் பாய்கிறது. யார், எவர், எப்படி இது நடக்கிறது என்பதே தெரியாமல் அனைவரும் முழிக்கிறார்கள். அடுத்த நாள் சென்னை வாழ் மக்களின் முக்கால்வாசி பேரின் செல்போன்களும் வானில் பறந்து சென்று மறைகின்றன.

உடனடியாக இது தொடர்பான அரசு உயர் மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் பிரிகிறார்கள் அதிகாரிகள்.

இந்த நேரத்தில் புதிதாக செல்போன்களை வாங்கி விற்பனை செய்ய தயாராகிறார் மிகப் பெரிய செல்போன் ஷோ ரூமின் உரிமையாளரான ஐசரி கே.கணேஷ். அந்த நள்ளிரவில் அவர், அவரது படுக்கையறையில் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இதனைச் செய்வது செல்போன்கள்தான்..!

இதையடுத்து செல்போன் நிறுவனத்தின் அதிபர் ஒருவரும் இதேபோல் நடு ரோட்டில் படு பயங்கரமான முறையில் செல்போன்களின் கூட்டணியால் படுகொலை செய்யப்படுகிறார்.

இன்னொரு பக்கம் வசீகரன் தனது தேடுதல் பணியைத் தொடங்குகிறார். அப்போது திருடு போன அத்தனை செல்போன்களும் சென்னைக்கு அருகேயிருக்கும் திருக்கழுக்குன்றம் அருகில் சென்றவுடன் தங்களது செயல்பாட்டை இழப்பதை அறிகிறார் வசீகரன்.

இதையடுத்து திருக்கழுக்குன்றதுக்கு தனது ரோபோவான எமி ஜாக்சனுடன் வந்து சோதனையிடுகிறார் வசீகரன். அப்போது அந்த செல்போன்கள் கூட்டம் ஒன்று கூடி ஒரு பேய் வடிவத்தில் அலைவதைப் பார்க்கிறார். இப்போது அந்த செல்போன்களின் கூட்டத்தைக் கூட்டியிருப்பது நிச்சயம் பேய் வடிவில் இருக்கும் ஒரு உருவம்தான் என்பதை ஊர்ஜிதமாக்கிக் கொள்கிறார் வசீகரன்.

இரண்டு படுகொலைகளையடுத்து அரசுத் தரப்பில் இருந்து மீண்டும் ஒரு அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. இப்போது மத்திய செய்தி, தகவல் தொடர்பு துறை அமைச்சரே வந்திருக்கிறார். “இப்போது இந்த அநியாயத்தைத் தடுத்து நிறுத்த சிட்டியால் மட்டுமே முடியும்…” என்கிறார் வசீகரன். ஆனால் முதல் பாகத்தில் சிட்டியால் படுகொலை செய்யப்பட்ட விஞ்ஞானியின் மகனான அசுதோஷ் இதை எதிர்க்கிறார்.

“சிட்டி மறுபடியும் மக்களை கொலை செய்தால் யார் அதற்கு பதில் சொல்வது..?” என்று சொல்லி அமைச்சரும் இதற்கு அனுமதியளிக்க மறுக்கிறார். ஆனாலும் வசீகரன் இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து சிட்டியை கடத்தி வந்து அவருக்கு உயிர் கொடுக்கிறார்.

இப்போது சிட்டி மற்றும் எமி ஜாக்சனுடன் திருக்கழுக்குன்றம் வரும் வசீகரன் மிகக் கடுமையாகப் போராடி அந்த பேய் உருவத்தைப் பிடித்து ஒரு சிப்பில் வைத்து அடைக்கிறார். பிரச்சினை முடிந்தது என்று அனைவரும் பாராட்டுக் கூட்டமே நடத்தி வசீகரனையும், சிட்டியையும் பாராட்டித் தள்ளுகிறார்கள்.

இதைப் பொறுக்காத அசுதோஷ் அன்றைய நள்ளிரவிலேயே அந்த பேய் உருவம் அடைக்கப்பட்டிருந்த சிப்பை எடுத்து அதற்கு உயிர் கொடுத்து திறந்துவிட.. மறுபடியும் பேயாட்டம் ஆட ஆரம்பிக்கிறது அந்த பேய் உருவம்.

இப்போது அது வசீகரனின் உடம்பிலேயே புகுந்து ‘உள்ளே’ ‘வெளியே’ என்று கள்ளாட்டம் ஆடுவதால் சிட்டியால் பேய் உருவத்தை அழிக்க முடியாமல் போகிறது. இதையே சாக்காக வைத்து சிட்டியை உடைத்துப் போடுகிறது அந்த பேய் உருவம். எமி ஜாக்சனையும் அது தாக்கிவிட.. கடைசி நிமிடத்தில் வசீகரன் சொன்னது போல சிட்டியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான ‘2.0’ என்கிற அடுத்த வெர்ஷன் இருக்கும் மதர் போர்டு சிப்பை சிட்டிக்குள் பொருத்தி அதற்கு உயிர் கொடுக்கிறார் எமி ஜாக்சன்.

இப்போது பல மடங்கு சக்தியோடு உயிர்த்தெழும் சிட்டி, எப்படி அந்த பேய் உருவத்தை அழித்தொழிக்கிறார் என்பதுதான் இந்த சயின்ஸ் பிக்சன் படத்தின் திரைக்கதை.

அந்த பேய் உருவத்திற்கும் ஒரு சோகமான கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இது ஷங்கரின் அனைத்து படங்களிலும் நாயகர்களுக்கு இருக்கும் சோகமான பிளாஷ்பேக் போன்றதுதான்.

சலீம் அலி என்றும் இந்தியாவின் பறவை ஆராய்ச்சியில் புகழ் பெற்று விளங்கிய ஆராய்ச்சியாளரை போன்று ‘பட்சிராஜன்’ என்னும் அக்சய்குமாரும் திருக்கழுக்குன்றத்தில் வாழ்கிறார். அவர் பிறந்தபொழுதே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டவர். ஆனால் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு சிட்டுக்குருவி அவருடைய நெஞ்சுக் கூட்டை தனது அலகால் குத்தி குத்தி, இதயத்தை தூண்டிவிட சட்டென்று உயிர் கிடைத்து பிழைத்தவர். இதனால் தன்னுடைய பெயரை ‘பட்சிராஜன்’ என்றே வைத்துக் கொண்டார்.

பிறப்பில் இருந்தே பறவைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். தனது வீட்டையே பறவைகளுக்கான வசிப்பிடமாக மாற்றியமைத்திருக்கிறார். 1995-களில் இருந்து செல்போனின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியபோது அது பறவையினங்களை அழிப்பதாக கண்டறிகிறார் பட்சிராஜன்.

செல்போன் டவர்களிலிருந்து வெளிப்படும் மின் காந்த அலைகளின் வீச்சானது பறவைகளின் மூளையை தாக்கி செயலிழக்க வைப்பதும், அவைகளின் முட்டைகளை துவக்க நிலையிலேயே அழிப்பதும், பறவைகளின் நினைவாற்றலை சீர்குலைக்கவும் செய்வதாக கண்டறிகிறார் பட்சிராஜன்.

இந்த நேரத்தில் அவரது வீட்டருகேயே ஒரு செல்போன் டவர் அமைக்கப்படுகிறது. அது அமைந்தால் தன் வீட்டில் வளரும் பறவைகளுக்கு ஆபத்து என்று அதை எதிர்க்கிறார் பட்சிராஜன். ஆனால் அது பலனளிக்கவில்லை.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் தனியொரு மனிதனாக போராடி புகார் தருகிறார் பட்சிராஜன். ஆனால் அது குப்பைக் கூடைக்கு போகிறது. நீதிமன்றப் படியேறுகிறார். அங்கேயும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் வீட்டில் வளர்த்து வந்த அத்தனை பறவைகளும் தங்களுடைய உயிரைத் துறக்கின்றன.

வீட்டுப் பகுதி முழுவதையும் மயானமாக மாற்றி அவற்றுக்கு பூக்களை வைத்து பூஜிக்கும் பட்சிராஜன் ஒரு நாள் தன் வாழ்க்கையையே வெறுக்கிறார். அதே செல்போன் டவரில் ஏறி அங்கேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார் பட்சிராஜன்.

அவர் தற்கொலை செய்து கொண்டவுடன் அவருடைய உடலிலிருந்து பிரியும் ஆவி, அங்கே புதைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகளின் ஆவியோடு கூட்டு சேர்ந்து ஒரு கருடனாக உருவெடுக்கிறது. இந்தக் கருடன் என்னும் பேய்வடிவம்தான் செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வில்லனாகிறது.

இது அக்மார்க் ஷங்கரின் படம்தான். மிக எளிமையான கதைக் கரு. பாதிக்கப்படும் நபருக்கு ஒரு கண்ணீர் வரவழைக்கும் பிளாஷ்பேக். புதிய, புதிய தகவல்கள் பொது அறிவாக ரசிகர்களுக்கு புகட்டல்.. ஆனால் காட்சிக்குக் காட்சி பிரம்மாண்டம்.. என்று ஷங்கரின் வழக்கமான பாடங்களே இந்தப் படத்திலும் இருக்கிறது. இல்லாதது காமெடியும், காதலும்தான்..!

அது உண்மையில் இந்தப் படத்திற்குத் தேவையில்லாததுதான். ஏனெனில் ‘சிட்டி’ ரஜினியும், எமி ஜாக்சனும் மனித வடிவங்களே இல்லையென்றாலும் காதல் உணர்வைத் தொடும் சில காட்சிகள் படத்தில் இருக்கின்றன.

‘வசீகரன்’, ‘சிட்டி’, ‘சிட்டி 2.0’, ‘சிட்டி 3.0’ என்று நான்கு வடிவத்திலும் ரஜினியே படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். வசீகரனில் அதே ‘எந்திரனின்’ வசீகரம் தெரிந்தாலும் கொஞ்சம் வயதான தோற்றமும் தென்படுகிறது. ‘சிட்டி 2.0’ இடைவேளைக்கு பின்பு தோன்றியவுடன்தான் அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமும் பிறக்கிறது.

பேசும் வசனங்களிலும், ஆக்சன்களிலும் அடிக்கடி தனது அக்மார்க் ஸ்டைலை பரப்பி விசிலை கிளப்பிவிடுகிறார் ரஜினி. ‘எந்திரனில்’ கிளைமாக்ஸில் புகழ் பெற்ற அந்த ஆட்டின் குரல் மிமிக்ரியும் இதே படத்தில் அதே ஸ்டைலில் ஒலித்து கை தட்டலை பெற்றிருக்கிறது.

படத்தின் வசனங்களும் சூப்பர் ஸ்டாரின் இமேஜை உயர்த்துவதுபோலவும், அவருடைய அரசியல் அரிதாரத்துக்கு மத்தளம் கொட்டுவதுபோலவும் அமைந்திருப்பது அவரது ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கும் டானிக்.

இந்த வசனங்களை எழுத்தாளர் ஜெயமோகன்தான் எழுதினாரா என்ற சந்தேகமும் இருக்கிறது. அவர்தான் எழுதியிருக்கிறார் என்றால் யதார்த்த வாழ்க்கையில் அடி போடும் இலக்கிய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்றாகிறது.

“இப்போ இவர்தான் நம்பர் ஒன்” என்று சொல்லும்போது “நம்பர்-1, நம்பர்-2 எல்லாம் பாப்பா விளையாட்டு; ஐ ஆம் தெ ஒன்லி ஒன் சூப்பர்” என்று ரஜினி தன் ஸ்டைலில் பேசும் வசனம் ரஜினி ரசிகர்களுக்கு தெய்வ கடாட்சம் கிடைத்தாற்போல் தெரிகிறது.

இன்னொரு இடத்தில் சிச்சுவேஷனுக்கு ஏற்றாற்போல “ஓடிப் போறது என் சாப்ட்வேர்லயே கிடையாது” என்கிறார் சிட்டி ரஜினி. அரசியலை முன் நிறுத்திய இந்த வசனத்திற்கும் அதிரடி கைதட்டல்கள்.

“வாடா செல்பி புள்ள” என்று அக்சய் குமாரை அவர் அழைக்கும் ஸ்டைலும், அவருடைய ரசிகர்களாக இல்லாதவர்களைக்கூட கை தட்ட வைத்துவிடுகிறது.

 “செத்துப் பிழைக்கிறது ஒரு தனி சுகம்” என்று ரஜினி சொல்வதும் அவருடைய மருத்துவமனை வனவாச காலங்களை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்துவது போலவே இருக்கிறது.

சிட்டி ரஜினி எமி ஜாக்சனிடம் “வசீகரன் படைச்சதிலேயே அற்புதமான வி‌ஷயங்கள் ரெண்டு. ஒண்ணு நான்; இன்னொண்ணு நீ…” என்று பேசும் ரொமாண்டிக் வசனம்தான் தியேட்டரில் அதிக கைதட்டல்களைப் பெற்றது.

சிட்டி ரஜினி தான் உருவாக்கிய தன்னைப் போன்ற ‘சிட்டி’க்களிடம், “டேய் அந்த குருவிய சுடுங்கடா…” என்று ஆர்டர் கொடுக்கும்போது ‘தூள்’ என்று துள்ள வைக்கிறது.

எமி ஜாக்சனை அருகில் அழைத்து இறுக்கி அணைத்து “வாவ்” என்று ‘சிட்டி’ ரஜினி சொல்லும் அழகே அழகு.

இதே சிட்டி, ஒரு காட்சியில் வசீகரனிடம் அடங்கி நடப்பது போல வசனம் பேசிவிட்டு தன் கைவிரலை நீட்டி “எங்க தொடு பார்க்கலாம்…” என்று சவால் விடும்போதும் வாவ் என்று சொல்ல வைக்கிறது ஷங்கரின் இயக்கம்.

‘சிட்டி 3.0’-வாக சாதாரண சிறிய புறாவின் மேல் அமர்ந்து சிறிய வடிவத்தில் வந்து பட்சிராஜனை மிரட்டும் தோரணை நகைச்சுவையுடன் கொஞ்சம் பிரமிப்பையும் கொடுக்கிறது. கிளைமாக்ஸில் இவரை வைத்து அடுத்த பாகத்தையும் லேசாகத் தொட்டுக் காண்பித்திருக்கிறார் ஷங்கர்.

சிட்டி ரஜினியின் 3.0-வாக வரும் குட்டி ரோபோ ரஜினி ‘ஐ ஆம் குட்டி. பேரன்’ என்று ஸ்டைலாகச் சொல்வதெல்லாம் ரஜினியின் காந்த ஸ்டைல் பேச்சு..!

இதே குட்டி ரஜினி 3.0, “சிங்கம் நினைச்சா கொசுவை ஒண்ணும் செய்ய முடியாது; ஆனா கொசுக்களெல்லாம் நினைச்சா சிங்கத்தை என்ன வேண்ணாலும் செய்யலாம் கண்ணா..” என்று அக்‌‌ஷய் குமாரிடம் சவால் விடுவதும் ரகளையான காட்சி..!

பட்சிராஜனாக மிகுந்த கஷ்டத்திற்கிடையில் நடித்திருக்கிறார் அக்சய்குமார். இந்த டெர்ரர் மேக்கப்பில் அவரைப் பார்க்கவே நிஜமான அயல் கிரக அரக்கன் மாதிரியிருக்கிறார். இந்த மேக்கப்பும், அவருக்கான உடையலங்காரமும், இடையிடையே பல்வேறு விதமான வடிவங்களில் போர்க்கள சமர் செய்வதெல்லாம் எழுத்தில் எழுத முடியாத விஷயம்.

பேராசிரியர் பட்சிராஜனாக தனது முதிய வயதில் சிட்டுக் குருவிகளையும், மற்ற பறவைகளையும் காக்கும் பொருட்டு அவர் அலையும் அலைச்சலும், படும்பாடும், வேதனையும் மிக வேகமான காட்சிகளால் நகர்ந்து போவதால் அதன் தாக்கம் ரசிகர்களின் மனதில் நிற்கவில்லை என்பதுதான் படத்தின் மீதான மிகப் பெரிய குற்றச்சாட்டு.

இத்திரைக்கதை அழுத்தமாக இல்லாமைக்கு அடுத்தது என்ன என்பது போன்ற ஏக்கத்தை முன்பேயே ஏற்படுத்திவிட்டு நடுவில் கதை சொல்ல அமர வைத்ததுதான் காரணமாகும்.

எமி ஜாக்சனுக்கு ரோபோ வடிவ கேரக்டர் என்பதால் ஒரு மிஷினாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. அதோடு இந்த ரோபோ உடையில் திருக்கழுக்குன்றம் தெருக்களில் அவர் நடந்து வருவதை பார்க்கும்போது கம்பீரமாகவும், கவர்ச்சியாகவும் தெரிகிறது.. இவருடனான டூயட் பாடலான ‘இந்திர லோகத்து சுந்தரி’ பாடலை கடைசியில் டைட்டில் பாடலாக மாற்றியமைத்த ஷங்கருக்கு நமது வன்மையான கண்டனங்கள்..!

மாநில செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரான ‘கலாபவன்’ சஜோன், மலையாள நடிகர்.  செல்போன் டிஸ்ப்ளேவில் தோன்றும் ‘UnKnown’ என்கிற பெயரை ‘யார்ரா அது உன்னிகிருஷ்ணன்?’ என்று கேட்கும் அளவுக்கு அறிவாளியான அவரது ஜாதகமே அவரது செல்போனில் மாட்டிக் கொண்டிருப்பதால் அவரும் சிக்கலில் இருக்கிறார். இது தொடர்பான காட்சிகளும், மயில்சாமியின் ஏடாகூட வசனங்களும், ஆக்சன்களும் கொஞ்சம் சிரிப்பைக் கொடுக்கின்றன.

நீரவ்ஷாவின் கண்ணாடி மாதிரியான ஒளிப்பதிவுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். 3-டி-க்கேற்றாற் போன்று காட்சிகளை வடிவமைத்து மிகக் கடினப்பட்டு படமாக்கியிருக்கிறார்கள். எத்தனை பாராட்டினாலும் தகும். இதுபோன்ற காட்சியமைப்புகளை இதுவரையிலும் ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்க முடியும். முதல்முறையாக ஒரு தமிழ்ப் படத்தை ஹாலிவுட் தரத்தில் கொடுத்திருக்கும் ஷங்கரின் இந்த முயற்சிக்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவே வலதும், இடதுமாக இருந்து உதவியிருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

கலை இயக்குநர் முத்துராஜுக்கும் இந்தப் படம் ஒரு மைல் கல்லாகவே இருக்கும். சிந்தித்ததும், சொன்னதும் வேண்டுமானால் ஷங்கராக இருக்கலாம். ஆனால் அதனைச் செயல்படுத்தியவிதத்தில் முத்துராஜ் அசத்தியிருக்கிறார். வசீகரனின் ஆராய்ச்சிக் கூடம், அவரது ‘ஆரா’ என்னும் மின் காந்த அலைகளை வெளியேற்றும் வேனின் வடிவமைப்பு, பட்சிராஜனின் வீடு, பறவைகளின் சமாதி அமைப்பு, படமாக்கப்பட்ட அனைத்துவித காட்சிகளின் செட்டுகள் என்று தொடர்ந்த அனைத்துக் காட்சிகளிலும் முத்துராஜின் கைவண்ணம் மிளிர்கிறது. ‘கலை இயக்குநர்’ என்ற விருதுக்கான முழு தகுதியும் இவருக்கே உண்டு.

இந்தப் படத்தில் இருப்பது போன்ற கிராபிக்ஸ் அனிமேஷன் காட்சிகள் இதுவரையிலும் வேறு எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் கிராபிக்ஸில் ஒரு வரலாறே படைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இயக்குநர் என்னும் போர்வையில் ஷங்கர் ஒரு மகத்தான படைப்பாளி.. மிகச் சிறந்த ஆராய்ச்சி வல்லுநர் என்றுகூட சொல்லலாம். மின் காந்த அலைகளில் நெகட்டிவ், பாஸிட்டிவ் பற்றி அலசி, ஆராய்ந்து துப்புத் துலக்கி இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

இதைச் சொல்லும்விதமாக அவர் வடிவமைத்திருக்கும் வேன், மின் காந்த அலைகளை வெளியிடும் ஆண்டனா போன்ற அமைப்புகள்.. அதில் சிக்காமல் இருக்க பட்சிராஜன் படும் அவஸ்தை.. இதில் சிட்டி செய்யும் சாகசங்கள்.. கிளைமாக்ஸில் டெல்லி பெரோஷ்ஷோ கோட்லா மைதானத்தில் அதகளம் செய்திருக்கும் விதம், விதமான கிராபிக்ஸ் போர்கள் என்று அத்தனைக்கும் படைப்பாளியாக ஷங்கர் விருதினை பெற்றாலும் அதனை குறையில்லாமல் நிறைவாகவே செய்து கொடுத்திருக்கும் கிராபிக்ஸ் வல்லுநர் குழுவினரை பெரிதும் பாராட்டுகிறோம்.

இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வேலையே இல்லை. ‘சிட்டி’ ரஜினிக்கு மட்டும்தான் தீம் மியூஸிக்கை போட்டு தள்ளுகிறார். மற்றபடி வேறு யாராவது சின்ன இசையமைப்பாளரை போட்டிருந்தால்கூட அவர் தன்னால் முடிந்ததை செய்திருப்பார். 6 கோடி ரூபாயாவது மிச்சமாகியிருக்கும்..! ‘புள்ளினங்கள்’ பாடல் மட்டுமே ரஹ்மானுக்காக படத்தில் இருக்கிறது.

எடுத்துக் குவித்த காட்சிகள் அத்தனையையும் ஒன்று திரட்டி சுவாரஸ்யமாக ஆக்குவதை போல தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளர் ஆண்டனிக்கும் நமது வாழ்த்துகள். குறிப்பாக ‘சிட்டி’ ரஜினி, பட்சிராஜன் மோதல், கிளைமாக்ஸில் உச்சக்கட்ட மோதல் போன்ற இடங்களில் கிராபிக்ஸும், மனித நடிப்பையும் சேர்த்து வைத்து கொஞ்சமும் இடையூறு தோன்றாத வண்ணம் தொகுத்திருக்கிறார். நிச்சயமாக இதற்கெல்லாம் மிகப் பெரிய நுண்ணறிவு தேவை. அது ஆண்டனி ஸாருக்கு இருக்கிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள் ஸார்..!

உண்மையில் இத்திரைப்படத்தின் நாயகன் அக்சய்குமார் என்னும் பட்சிராஜன்தான். ஆனால் அவரையே வில்லனாக்கிவிட்டார்கள். எப்போதும் ஷங்கரின் படங்களில் பாதிக்கப்பட்டு எதிர் விளைவுகளில் ஈடுபடுபவர்தான் ஹீரோ. அந்த வகையில் இங்கே அக்சய்குமார்தான் அப்படி கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் அவரை கொலையாளியாக மாற்றிவிட்டதால் படத்தின் மீதான நம்பகத் தன்மை கொஞ்சம் குழப்பம் வாய்ந்ததாக அமைந்துவிட்டது.

உண்மையில் அக்சய் குமார் நல்லதுதான் சொல்கிறார். அதை ஏற்றுக் கொள்ளாமல் அவரது தற்கொலைக்குக் காரணமான நாம்தான் குற்றவாளிகள். இதற்கு சப்பைக் கட்டுக் கட்டும்விதமாக மின் காந்த அலைகளின் வீச்சைக் குறையுங்கள்.. செல்போன் டவர்களின் எண்ணிக்கையைக் குறையுங்கள் என்றெல்லாம் சொல்வது அர்த்தமற்ற செயல். செல்போன் டவர்களின் எண்ணிக்கை கூடினால்தான் செல்போன்களின் பயன்பாட்டுக்கு இடையூறாமல் இருக்கும். செல்போன்களின் பயன்பாட்டையே கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பது இந்த யுகத்தில் சாத்தியமே இல்லாத விஷயம். அந்த வகையில் கேலிக்குள்ளாக்கும்வகையிலான ஒரு கதைக் கருவை ஷங்கர் கையில் எடுத்திருப்பதுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பேக் டிராப்.

அதேபோல், நிச்சயமாக இந்தப் படத்தை 3-டி-யில் எடுத்திருக்கக் கூடாது. வெகுஜன ரசிகர்களின் உச்ச நடிகரான ரஜினிகாந்த் காட்டும் கோப, ஆவேச, உணர்ச்சிப் பிரவாகங்களை கருப்புக் கண்ணாடி போட்டு பார்த்து உணர்ந்து தங்களது கண்களை கசக்குவதென்பது யாராலேயும் முடியாது. ஒரு நொடிதான்.. ஒரேயொரு சிங்கிள் ஷாட்டுதான் சில படங்களின் அதீத வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. அது போன்ற ஒரு ரசவாத உணர்வை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தர மறுத்திருப்பதுதான் இந்தப் படம் குறித்த பல்வேறு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தைச் சாதாரணமான 2-டி படமாகவே கொடுத்திருந்தால் படத்தின் ரிசல்ட் மாறியிருக்கும் என்பதுதான் அதிகப்படியானவர்களின் கருத்து. இந்தக் கருத்துடன் நாமும் ஒத்துப் போகிறோம்.

குழந்தைகளுக்கான படமாக இருக்கிறது என்று சொல்ல வைத்திருக்கும் அளவுக்கான 3-டி மேஜிக்குகளை படத்தில் வைத்துவிட்டு இதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் என்று சொன்னால் எப்படி.. யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்..?

ஆனால் இயக்குநர் ஷங்கரின் திறமையை எத்துணை பாராட்டினாலும் தகும்.. 4 ஆண்டு கால உழைப்பு.. 550 கோடி செலவு. போட்ட பணம் கிடைக்க வேண்டுமே என்பதற்காக இந்தக் குழுவினர் படும் பாடு, இதையெல்லாம் பார்த்தால் திரும்பவும் “இது மாதிரியான ஒரு படத்தை எடுத்து அல்லல்படாதீர்கள்…” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!

படத்தில் இடம் பெற்ற செல்போன் டவர்களால் பறவைகள் அழிவது என்பதும் இப்போது பரவலாக சர்ச்சையாகியிருக்கிறது. அது போன்ற பிரச்சினைகளே இல்லை என்று ஒரு சாராரும், “இருக்கிறது. இல்லாமலா அதிக்கபடியான மின் காந்த அலைகளை வெளியிட்டமைக்காக செல்போன் நிறுவனங்கள் 10 கோடி ரூபாயை அபராதமாக கட்டியிருக்கின்றன…” என்று இன்னொரு சாராரும் சொல்லி வருகின்றனர்.

இதன்படி பார்த்தாலும் மின் காந்த அலைகளின் தாக்கத்தால் பறவைகளுக்கு ஏற்படும் தீங்கும், மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகளும் இதுவரையிலும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையென்பதால் இந்தப் படத்தின் கதை மக்கள் மனதைத் தொடவில்லை என்பதுதான் உண்மை.

சிட்டுக் குருவிகளின் இல்லாமையைச் சுட்டிக் காட்டி இதற்கு செல்போன் டவர்களும், செல்போன்களின் பயன்பாடுகளும்தான் காரணம் என்று சொல்லியிருப்பது ஒரு சந்தேகத்தைக் கிளப்பும் அளவுக்குத்தான் இங்கே மக்களிடையே பேசப்படுகிறது.

சிட்டுக் குருவிகள் காணாமல் போனமைக்குக் காரணம் நகரம் அதி வேகமாக வணிகக் குடியிருப்புகளை போல பல மாடி கட்டிடங்களாக உருவானதுதான்  வெளிப்படையான உண்மை.

மரங்களையும் அழித்துக் கொண்டிருப்பது, மர வீடுகளே இல்லாமல் இருப்பது.. சிட்டுக் குருவிகளுக்கேற்ற தானியங்கள் அவைகளுக்கு மிக எளிதாக கிடைக்காமல் இருப்பது.. இப்படி பலவைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனாலும், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே ஆனதல்ல.. பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆனது.

மனிதன் தன்னை வளப்படுத்த நினைக்கும் அதே நேரத்தில் சகல ஜீவராசிகளையும் மனதில் கொண்டு அவைகளை பாதிக்காத வண்ணம் நடந்து கொள்வதுதான் மனித நீதி என்னும் ஒரு உயரிய கருத்தை இந்தப் படத்தின் மூலம் பகிர்ந்து கொண்டமைக்காக இயக்குநர் ஷங்கர் பெரிதும் போற்றப்பட வேண்டியவராகிறார். இந்தப் படமும் தமிழ்ச் சினிமாவில் மிக மிக முக்கியமான ஒரு படமாகவும் போற்றப்பட வேண்டியிருக்கிறது..!

இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டியது ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனின் கடமையுமாகும். ஆகவே, அவசியம் தியேட்டருக்கு சென்று 3-டி எபெக்ட்டில் இந்தப் படத்தைப் பார்த்து புதியதொரு அனுபவத்தை காணுங்கள்..!!!
error: Content is protected !!